தண்ணீர் இல்லாமல் - 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் கருகும் அபாயம்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 19:24

சீர்காழி,

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாசனத்திற்கான காவிரி தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு  50, 000 ஏக்கர் அளவுக்கு பயிர்கள்  கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா விவசாய பகுதியான சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக காவிரி  நீர் வராததாலும் மழை பொய்த்துப் போனதாலும்  மூன்று போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போக விளைச்சலுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக விவசாயிகள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது.

அதனால், கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகாவில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்காக நேரடி விதைப்பு மற்றும் நடவு பணியை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது சீர்காழி, கொள்ளிடம், மகேந்திரப்பள்ளி, மாதானம், எடமணல், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டாரம் முழுவதும் தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்து, சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் முளைத்த நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக 3 முறை மேட்டூர் அணையின் கொள்ளளவு 120 அடியை தொட்டுவிட்டது. காவிரியில் நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. ஆனாலும்,

குடிமராமத்து திட்டப் பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாகவும், பாசன ஆறுகள் வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணிகள், காடுமண்டி கிடக்கும் கிளை வாய்கால்களை தூர் வாரும் பணிகள் உள்ளிட்டவை  நடைபெற்று வருவதால் தண்ணீர் வரும் பாதையின் குறுக்கே மண் மூடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறும் விவசாயிகள் சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கருகும் நெற்பயிர்களைக்  காப்பாற்ற தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.