பிரதமர் மோடி – சீன அதிபருக்கு 32 இடங்களில் பாஜக வரவேற்பு

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 14:56

சென்னை,

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது 32 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பாஜக திட்டமிட்டுள்ளது என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருக்கும் வரவேற்பு அளிப்பது குறிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது, கட்சிக் கொடிகள் இருக்காது; இந்திய தேசியக் கொடி, சீன நாட்டு கொடிகளை ஏந்தி சென்னை முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டம் உள்ளது எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த பிரச்சார வாகனத்தில் இந்தியா - சீனா இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு குறித்தும் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்தும் காணொலிகள் இடம்பெற்றுள்ளன.