சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளது: சென்னை ஐகோர்ட் கருத்து

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 14:08

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்காக மாமல்லபுரம் வர இருப்பதால் சென்னை சுத்தமாகி உள்ளது. உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகிவிடும் என  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பேனர் விபத்தில் பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற என் மகள் சுபஸ்ரீ மீது விழுந்தது. அதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் என் மகள் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தற்போது நடந்து வரும் விசாரணை அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டும். சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடாக தனது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கவேண்டும்.

சட்ட விரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை, கடுமையான தண்டனை வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசுக்கு உத்தரவிடவேண்டும் என சுபஸ்ரீயின் தந்தை ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார்,

சுபஸ்ரீ வழக்குக் குறித்த காவல்துறை விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்கானிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஜெயகோபால் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

5 லட்சம் இடைக்கால இழப்பீடு சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்குப் பின்னர் பேனர் வைக்க தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் அனுமதி வழங்கவில்லை என  அரசு தரப்பு வழக்கறிஞர், தெரிவித்தார்.

சுபஸ்ரீயின் தந்தை ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 

"இவ்வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்," எனக் கோரினார்.

அப்போது நீதிபதி வைத்தியநாதன், 

சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது. மற்ற உலகத் தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகிவிடும்.

பேனர் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பார்த்துவிட்டு பின்னர் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை பின்னர் ஒத்திவைத்தனர்.