மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்கள் ஜாவடேகர், ஷெகாவத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 13:01

சென்னை,

கர்நாடக - மேகதாது அணை பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று  மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

மேகதாது அணை உள்பட காவிரியின் குறுக்கே எந்தவொரு திட்டத்துக்கும் தமிழ்நாடு உள்பட காவிரி கரையோர மாநிலங்களின் அனுமதியின்றி ஒப்புதல் அளிக்கக் கூடாது என, 10.07.2019 அன்று தான் ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவ்வாறு அனுமதி அளிப்பது, காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரிப்படுகையில் உள்ள மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான நீரை தேக்கிக்கொள்ளவும் விநியோகிக்கவும் ஏற்ற வசதிகள் உள்ளன என, காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், மேற்கொண்டு அணை கட்ட கர்நாடக அரசு கோருவதை ஏற்க முடியாது என கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு அவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணங்களின் அடிப்படையில், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்க் கூடாது எனவும், விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.