லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை: கொள்ளையன் சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 12:21

திருவண்ணாமலை,

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி சுரேஷ் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கொள்ளையடித்த நகைகளுடன் திருவாரூர் அருகே விளமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவல்துறையினர் துரத்தியதில், அவருடன் இருந்த மணிகண்டன் என்பவர் ஒரு பகுதி நகைகளுடன் பிடிபட்ட நிலையில், திருவாரூர் - சீராத்தோப்பு சுரேஷ் தப்பியோடினார்.

கொள்ளையர்களைத் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சுரேஷ் சரண் அடைந்துள்ளார். வழக்கறிஞர்களும் அவருடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அக்டோபர் 1ம் தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் முகமூடி அணிந்த இருவர் 13 ரூபாய் கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம், பிளாட்டினம் ஆகிய நகைகளைக் கொள்ளையடித்தனர். இந்த கொள்ள சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கொள்ளைக் கூட்டத் தலைவன் முருகனின் அக்கா கனகவல்லியின் மகன்தான் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், கனகவல்லி ஆகியோரை போலீஸார் பிடித்தனர், பின்னர் இவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளைக் கூட்டத் தலைவன் முருகனை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

15 நாள் நீதிமன்றக் காவல்

இன்று காலை, செங்கம் நீதிமன்றத்தில் ஆஜரான சுரேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.