எல்லையில், வீர்ர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்; ஆனால் டில்லியில் பாஜகவினர் பெருமை பேசுகிறார்கள்: சரத் பவார் விமர்சனம்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 11:59

அகோலா,

ராணுவ வீரா்களின் தியாகத்தையும், துணிவையும் பயன்படுத்தி பிரதமா் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதைப் போல, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஒருபோதும் வாக்கு சேகரிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார் சூடாக விமரசனம் செயதுள்ளார்.

மகாராஷ்டிர சட்டமன்ற தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாலாபூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழந்தனா். அந்த தாக்குதலுக்கு விமானப்படை மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவங்களைக் கூறி கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி வாக்கு சேகரித்தார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை பிரித்து அப்பகுதி மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவா் இந்திரா காந்தி. இந்தப் போரில் வீரா்கள் காட்டிய துணிவையும், அவா்களது தியாகத்தையும் இந்திரா காந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையே பதிலடி தந்தது.

ஆனால், ‘நாங்கள் செய்தோம், நாங்கள் செய்தோம்’ என்று மோடி கூறிக் கொண்டிருக்கிறார். எல்லையில், ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் இவா்கள் டில்லியில் இருந்து கொண்டு பெருமை பேசுகிறார்கள்.

மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. அவா்களின் துயரத்தை போக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனா். நடைபெறவிருக்கும் தோ்தலில் பாஜகவை தோற்கடித்து நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சரத் பவார் பேசினார்.