கடந்த ஆண்டைவிட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 11:44

சென்னை,

கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு குறைவு தான் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில்   மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு தொடர் நடவடிக்கைகளுக்காக 160 வாகனங்களை இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.  

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் இந்த வாகனங்களை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியை மேற்கொள்வதுடன், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளன. இந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர்  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 

தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்கள் இயக்கப்படும் என்றும், காய்ச்சல் பரவுவதை தடுக்க அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வட சென்னை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லை என கூறி அனுமதிக்க மறுக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்து பேசிய விஜயபஸ்கர், 

ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் புதிதாக வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர்  கணேஷ்,   மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் முனைவர் நடராஜன்,  சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்)   மதுசூதன் ரெட்டி,   பொது சுகாதாரத் துறை இயக்குநர் மரு. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. சுவாதி, சென்னை மாநகராட்சி அலுவலர்கள்,  அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,  அரசு சித்தா  மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும்  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.