சீன அதிபர், பிரதமர் மோடி வருகை: அக்டோபர் 11, 12ல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 10:18

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங்க், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மாமல்லபுரம்  வருகையையொட்டி அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோர் வருகையை யொட்டி சென்னையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது 

ஜி.எஸ்.டி. சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை) 

அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை) சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, 

ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.

எனவே,மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்து பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மற்றும் 

12.10.2019 அன்று காலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை மேற்படி சாலைகளில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

மேலும் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும்.

11.10.2019 அன்று 12.30 மணி முதல் 2 மணி வரை: பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "0" பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக திருப்பிடப்படும்.

சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம். 

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் சாலையை ரேடியல் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.

மாலை 2: மணி முதல் 9:00 மணி வரை: ராஜீவ் காந்தி சாலை (ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

12.10.2019: அன்று காலை 07.30 முதல் 2 மணி வரை ராஜீவ் காந்தி சாலை(ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

7:00 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. 

தேசிய விருந்தினர்களின் சென்னை வருகை சிறப்பாக அமைய பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.