ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்த 5,300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதியுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 20:51

புதுடில்லி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்த 5,300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 5,300 குடும்பங்களும் ஆரம்பத்தில் வேறு மாநிலங்களில் குடியேறி, பின்னர் மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு திருப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஜம்மு காஷ்மீருக்கு குடிபெயர்ந்தன.

அதேபோல் கடந்த 1965 மற்றும் 1971ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் போதும் ஜம்மு காஷ்மீரின் சம்ப் நியாபாத் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஜம்மு காஷ்மீரின் பிறபகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இவ்வாறு ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் மற்றும் சம்ப் நியாபாத் பகுதியில் இருந்து குடிபெயர்ந்த சுமார் 10 லட்சம் மக்கள் ஜம்மு பகுதியில் உள்ள 39 முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

பிரிவினை நடந்து 72 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தற்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் 31ம் தேதிக்கு மேல் தங்கள் மறுவாழ்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற வழிகிடைக்கும் என நம்புகிறார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் மறுவாழ்வுக்கான திட்டத்தை அறிவித்தார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 36,384 குடும்பங்களுக்கு மறுவாழ்வு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறிய பின் மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பிய குடும்பங்கள் இந்த நிதியுதவி பெறுவோரின் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் வேறு இடங்களில் குடியேறிவிட்டு மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்த 5,300 குடும்பங்களுக்கு ரூ.5.5. லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரு வரலாற்று பிழையை சரி செய்துள்ளது என தெரிவித்தார்.