காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஜி ஜின்பிங் - இம்ரான் கான் பேச்சுக்கு இந்தியா கண்டனம்

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 20:30

புதுடில்லி,

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் அமைதியாக பேசி தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து கூற வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை கடுமையாக பதிலளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் இந்தியா – பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இன்று சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரத்தை சீனா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் தன் சட்டப்பூர்வமான நலன்களை பாதுகாத்து கொள்வதற்கு சீனா முழு ஆதரவு அளிக்கும். காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என அதிபர் ஜீ ஜின்பிங் பிரதமர் இம்ரான் கானுக்கு அறிவுறுத்தியதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலை எப்படி மாறினாலும் சீனா - பாகிஸ்தான் உறவு உறுதியாக இருக்கும் என இம்ரான் கானுக்கு அதிபர் ஜீ ஜின்பிங் உறுதி அளித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

அதேசமயம் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையை தடுக்க சீனா உதவ வேண்டும் என இம்ரான் கான் கோரியதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் ஆதரவையும் நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் எப்போதும் மதிப்பதாக பிரதமர் இம்ரான் கான் அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் தெரிவித்ததாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

இந்தியா கண்டனம்

காஷ்மீர் விவகாரம் குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையிலான சந்திப்பின் போது காஷ்மீர் குறித்து பேசப்பட்டதாக  வெளியான செய்திகளை பார்த்தோம்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்தியா உறுதியாக தெரிவித்து வருகிறது. எங்கள் நிலைப்பாடு குறித்து சீனாவுக்கும் நன்றாக தெரியும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி மற்ற நாடுகள் கருத்து கூறுவதை ஏற்க முடியாது என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.