ஜம்மு காஷ்மீரில் 66 நாட்களுக்கு பின் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 20:16

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் 66 நாட்களுக்கு பின் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் யாரும் கல்லூரிகளுக்கு வரவில்லை. இதனால் கல்லூரிகளை மீண்டும் செயல்பட வைக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

காஷ்மீரில் அக்டோபர் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 9ம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாவட்ட ஆணையர் பஷீர் கான் கடந்த வாரம் அறிவித்தார்.

அதன்படி 3ம் தேதி காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவில்லை. காஷ்மீர் முழுவதும் நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை.

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட 66வது நாளான இன்று காஷ்மீர் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசியர்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் யாரும் வரவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 66வது நாளாக இன்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடை உரிமையாளர்கள் காலை 11 மணியுடன் கடைகளை மூடிவிடுகிறார்கள்.

இது சாலையோர விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடைகள் மூடப்பட்ட பின்பும் அவர்கள் சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார்கள். 

காஷ்மீரில் பொது போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. தனியார் வாகனங்களின் போக்குவரத்து இயல்பாக உள்ளது. இன்று லால் சவுக்கில் மிக பெரிய சாலை நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.