சென்னை,
பேனர் சரிந்து விழுந்து சாலையில் பலியான இளம் பெண் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
![]() | ![]() |
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி, சாலையோர தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீயின் மீது விழ, அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி மோதியதில், சுபஸ்ரீ மீது ஏறியது இந்த சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
அனுமதி இன்றி பேனர் வைப்பது குற்றம், என சென்னை மாநகராட்சி அறிவித்தது.
எந்த விழாவிற்கும் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆபத்தான வகையில் சாலையில் பேனர் வைக்க காரணமாக இருந்த அதிமுக பிரபலம் ஜெயகோபால் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றவும், தனது மகள் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.