அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடத்தும் விசாரணைக்கு வெள்ளை மாளிகை ஒத்துழைக்க மறுப்பு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 19:30

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடத்தி வரும் விசாரணைக்கு அதிபர் டிரம்ப் ஒத்துழைக்க மாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் குறித்து விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கீக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது.

அதை தொடர்ந்து அதிபர் டிரம்புக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் வெளிநாட்டு அரசுகள் தலையிட அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு கமிட்டி தலைவர் ஆடம் ஸ்கிஃப் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். ஜோ பிடன் மீது ஊழல் விசாரணை நடத்தும்படி உக்ரைன் மற்றும் சீனாவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதும் பிற நாட்டு அரசுகளை விசாரணை நடத்தும்படி சொல்வதற்கும் தனக்கு உரிமை உள்ளது என அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபருக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தது தொடர்பான ஆவணங்களை விசாரணை கமிட்டி முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஸ்டெபானி கிரிஷாம் செய்தியாளர்களிடம் பேசுகையில் :

அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அதிபர் எந்த தவறும் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அது நன்றாக தெரியும். வெறும் அரசியலுக்காக அதிபர் மீது பழி சுமத்தி கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றவே எதிர்க்கட்சிகள் இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த விசாரணை அமெரிக்க குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளை  மறுக்கிறது. மூடப்பட்ட அறையில் ரகசியமாக நடக்கும் இந்த விசாரணையில் அதிபர் தனக்கான சாட்சியங்களை முன்னிருத்தவும் எதிர்தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் ஆதாரங்கள் குறித்த விவரங்கள் அறிவதற்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக ஸ்டெபானி கிரிஷாம் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பாட் சிபோலோன் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் உங்கள் அடிப்படை ஆதாரமற்ற, அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாட்டை நிராகரிக்கிறது. உங்களது இந்த நடவடிக்கையால் அதிபருக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.  

நாட்டு மக்களுக்கு அதிபர் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அதிபர் டிரம்ப், அவரது நிர்வாகம் உங்கள் பாகுபாடுடைய அரசியலமைப்புக்கு விரோதமான விசாரணையில் பங்கேற்காது என பாட் சிபோலோன் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நான்சி பெலோசி கண்டனம்

எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க அதிபர் டிரம்ப் மறுத்ததற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் :

சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்வதை அதிபர் டிரம்ப் மிகவும் யதார்த்தமானதாக மாற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால் இப்போது அதை ஒரு நல்லொழுக்கமாக மாற்ற முயற்சிக்கிறார்.

இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்பின் விளக்கத்தை அமெரிக்க மக்கள் ஏற்கெனவே கேட்டுவிட்டனர். அதிபரின் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. நம் அரசியலமைப்பை மீறுகிறது. நம் நாட்டு தேர்தலின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது.

அதிபர் டிரம்ப் நம் நாட்டுக்கும் நம் ஜனநாயகத்திற்கும் செய்த துரோகத்தை மறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதம்.

இந்த கடிதம் அனுப்பப்பட்டது தவறான செயல். அதிபர் அவர்களே நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. நீங்கள் செய்த காரியத்துக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.