உத்தரபிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 17:59

லக்னோ

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இவர், கடந்த ஆகஸ்டு 24ம் தேதி உடல்நலக்குறைவால் டில்லியில் காலமானார்.

இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு அக்டோபர் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், பாஜக சார்பில் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து சுதான்ஷு திரிவேதி இன்று பெற்றுக்கொண்டார்.