ஜம்மு காஷ்மீர் கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 16:58

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தொகுதி மேம்பாட்டு கவுன்சில் (Block Development Council) தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 24ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கவுன்சிலர் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் தேர்தல் இது.

எனவே தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மிர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் :

நாட்டின் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள காங்கிரஸ் எந்த தேர்தலில் இருந்தும் பின்வாங்கியதில்லை. ஆனால் இன்று தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஜம்மு காஷ்மீர் அரசின் அலட்சியமான அணுகுமுறை, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் இந்த கவுன்சிலர் தேர்தலை காங்கிரஸ் புறக்கணிப்பதாக ஜி.ஏ. மிர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள கவுன்சிலர் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்த பிற முக்கிய கட்சிகளுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக ஜி.ஏ.மிர் குற்றம்சாட்டினார்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஜி.ஏ. மிர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.