மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கன அடியாக உயர்வு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 16:57

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காலை 8:00 மணி நிலவரப்படி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.97 அடியாக உள்ளது.

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, அணைக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,396 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 8:00 மணி அளவில் நீர்வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 24,169 கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் பகுதியில் பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் ஆறாவது நாளாக தடை நீடிக்கிறது.