விளம்பரத்திற்கு மட்டுமே விவசாயிகள் ஞாபகம் வரும்: உத்தரபிரதேச பாஜக அரசை விமர்சித்த பிரியங்கா

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 15:36

புதுடில்லி

உத்தரபிரதேச பாஜக அரசுக்கு, தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் நேரத்தில் மட்டுமே விவசாயிகளின் ஞாபகம் வரும் என்று பிரியங்கா காந்தி இன்று விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இறங்கியதற்குப் பின், மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளை கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக, உத்தரபிரதேச பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம், மஹோபா மற்றும் ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களில் 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 

வங்கியில் இருந்து பெற்ற பயிர்க் கடனை திரும்ப செலுத்த இயலாததால், தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் கிடைத்தன. இதை செய்தியாக வெளியிட்ட ஒரு பத்திரிக்கையின் செய்தியை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி டுவிட்டரில்,

”விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்க உத்தர பிரதேச மாநில பாஜக அரசு பல வழிகளை திட்டமிட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. மின்சார கட்டணம் என்ற பெயரில் விவசாயிகளை சிறையில் அடைத்துள்ளது. வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்தவிதமான காப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

உத்தரபிரதேச பாஜக அரசுக்கு, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சமயத்தில் மட்டுமே விவசாயிகளின் ஞாபகம் வரும்” என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.