ராஜஸ்தானில் துர்கா சிலையை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர் பலி

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 15:35

தோல்பூர்,

ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் ழூழ்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தோல்பூர் மாவட்டத்தில் விஜயதசமி நாளான நேற்று பர்பதி ஆற்றில் சிலர் துர்கா சிலையை கரைக்க சென்றனர்.

அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காக குதித்திருக்கிறார். ஆனால் அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற மேலும் சிலர் உடனடியாக ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 7 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மற்ற 3 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஆற்றில் மூழ்கி உயரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், டில்லியில் விநாயகர் சிலையை கரைக்கும் போது 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

அதை தொடர்ந்து உயிரிழப்பை தடுக்க மத்திய பிரதேச அரசு துர்கா சிலைகளை கிரேன் மூலம் ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.