வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 15:19

ஸ்டாக்ஹோல்ம்,

லித்தியம் அயன் பாட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஜான் குடெனஃப், ஸ்டான்லி விட்டிங்காம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபர் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானியான 97 வயது ஜான் குடெனஃபின், நோபல் பரிசு பெறும் மிகவும் வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவருடன் நோபல் பரிசை பகிர்ந்துக்கொள்ளும் ஸ்டான்லி விட்டிங்காம் பிரிட்டன் நாட்டவர். அகிரா யோஷினோ ஜப்பான் நாட்டை சேர்ந்தவர். இவர்கள் மூவரும் பரிசு தொகையான 9,14,000 டாலர்களை சமமாக பிரித்து கொள்வார்கள்.

இது தொடர்பாக நோபல் அகாதமியின் தேர்வு குழு வெளியிட்ட அறிக்கையின்  விவரம் :

மிகவும் குறைவான எடைக்கொண்ட, மீண்டும் சார்ஜ் செய்துக்கொள்ள கூடிய, சக்திவாய்ந்த லித்தியம் அயன் பாட்டரி இன்று மொபைல் போன், லாப்டாப், மின்சார வாகனங்கள் என அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றால் அதிகளவு சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தியை சேமிக்க முடியும். இவற்றின் மூலம் நாளை மாசு ஏற்படுத்தும் எரிவாயு இல்லாத சமுதாயம் உருவாகலாம்.

லித்தியம் அயன் பாட்டரிகள் கடந்த 1991ம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் நம் வாழ்க்கையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் அது தொடர்கிறது என தேர்வு குழு தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 10ம் தேதி சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தேர்வான விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.