பாலியல் பலாத்கார வழக்கு: சின்மயானந்தா, பாதிக்கப்பட்ட மாணவியின் குரல் மாதிரிகள் சேகரிப்பு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 14:54

ஷாஜகான்பூர்

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் குரல் மாதிரிகள் இன்று சேகரிக்கப்பட்டன.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. பின்னர், சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் சின்மயானந்தாவை கைது செய்தனர்.
சின்மயானந்தா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் குரலை பதிவு செய்துகொள்ள லக்னோவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை 6 மணியளவில் சின்மயானந்தா ஆய்வகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு குரலை பதிவு செய்தனர்.

பின்னர், காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இரண்டு குழுவினர், அவர்களை தனித்தனியே அழைத்துச் சென்று குரல் மாதிரிகளை சேகரித்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் திரிபாதி தெரிவித்தார்.