பெங்களூரு சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான்: விசாரணைக் குழு அறிக்கை

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 14:23

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிகளை வி.கே. சசிகலா மீறியது உண்மைதான் என விசாரணைக் குழு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.  

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் சிறை வளாகம் உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் செல்போன்கள் மூலம் கைதிகள் வெளியில் உள்ளவர்களுடன் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. புகாரை அடுத்து பெங்களூரு மாநகர போலீசார் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றனர். அங்குள்ள கைதிகளின் அறைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் அறைகளும் அடங்கும்.

இந்த திடீர் சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், மது பாட்டில்கள், கத்திகள் ஆகியன சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.

சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா கடந்த ஆண்டே புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்திருந்தனர்.

இதையடுத்து சசிகலா உள்ளிட்ட ஒருசில கைதிகளுக்கு சலுகைகள் அளிக்கப் பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து அப்போதைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இக்குழு சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையின் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது.

இருப்பினும் அறிக்கை குறித்த விவரங்கள் எதுவும் அப்போது வெளியிடப்பட வில்லை.

இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என்றும்

சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறியது உண்மையே என்றும்

சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கையினால் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி சசிகலா சிறையிலிருந்து முன்கூட்டியே வெளிவருவதில் சிக்கலாகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.