மாமல்லபுரம் கடல் பகுதியில் இந்திய - சீன போர் கப்பல்கள்: கண்காணிப்பு தீவிரம்

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 13:02

மாமல்லபுரம்,

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, மாமல்லபுரம் கடலில், இரு நாடுகளின் போர்க் கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிட உள்ளனர்.

இதனால் பாதுகாப்பு கருதி, மாமல்லபுரம் கடலின் அருகே 4 நாட்டிகல் கடல் மைல் தொலைவுக்கு 1 போர்க்கப்பல் என 10 நாட்டிகல் மைல் தொலைவு சுற்றளவைக் கண்காணிக்கும் வகையில் இரு நாடுகளும் தலா 2 போர் கப்பல்களை, மாமல்லபுரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளன. அதிவிரைவுப் படகுகளும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீன அதிபர், பிரதமர் வருகையையொட்டி நாளை முதல் 13 ஆம் தேதி வரை ஈஞ்சம்பாக்கம் – புதுப்பட்டினம் வரை உள்ள 22 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு

மாமல்லபுரம், சூலேரிக்காடு, கோவளம், நெம்மேலி, திருவிடந்தை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களைச் சேர்ந்த 7500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஓ.எம்.ஆர். பகுதி,  கேளம்பாக்கம், திருப்போரூர், பூஞ்சேரி கூட் ரோடு உள்ளிட்ட இடங்களில் மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை மாமல்லபுரத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சி முன்னோட்டத்தை பார்வையிடுகிறார்.