3 மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 12:46

புதுடில்லி

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து டில்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். சோனியாகாந்தி பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்தார். முதல்கட்டமாக உத்தரபிரதேச மாநில காங்கிரசில் மாற்றங்களை செய்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஜய் குமார் லல்லு, புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதேபோல துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் ஆகியோரும் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரியங்காவின் அறிவுரையின் பேரில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

ஷீலா தீட்சித் மறைவுக்குப் பிறகு முழு நேர காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படவில்லை. தலித் தலைவரான ராஜேஷ் லிலோதியா, சந்தீப் தீட்சித், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல புதிய பொறுப்பாளரும் நியமிக்கப்படலாம்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக முதலமைச்சர் கமல்நாத் உள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார்.

அவருக்கு பதிலாக ஜோதிர் ஆதித்யா சிந்தியா அல்லது முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங், மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு தொடர்பாக அகில இந்திய பொதுச்செயலாளர் மதுசூதனன் மிஸ்திரி கடந்த வாரம் மாநில தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.கே. பட்டீல் இடையே போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் செய்யப்படலாம். அடுத்த வாரம் சோனியா காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அந்த மாநில பொறுப்பாளருமான பிரியங்கா அடுத்த வாரம் ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.