பெண்களுக்கு மேலும் அதிகாரம் உரிமை வழங்க பிரதமர் மோடி அழைப்பு

பதிவு செய்த நாள் : 08 அக்டோபர் 2019 20:13

துவாரகை, (உத்தரப் பிரதேசம்)

உத்தரப்பிரதேச மாநிலம் துவாரகை நகரில் நடந்த ராம் லீலா விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவராத்திரி விழாவையொட்டி நமது பெண்களுக்கு மேலும் அதிகாரமும் உரிமையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் துவக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

துவாரகை நகரில் ஸ்ரீ ராம் லீலா சங்கம் ஏற்பாடு செய்திருந்த ராம் லீலா விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் அவர் உரையாற்றும் பொழுது கூறிய விவரங்கள் வருமாறு :

இந்தியா திருவிழாக்கள், பண்டிகைகள் நிறைந்த நாடு. ஒவ்வொரு விழாவும் பண்டிகையும் நம்முடைய சமூகத்தை இன்னும் நெருக்கமாக்கிறது.

ஒவ்வொரு விழாவின் போது நாம் ஒரு பணியினை மேற்கொள்ள உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பணி நம்முடைய நாட்டுக்கு நலம் பயப்பதாக அமைய வேண்டும் என மோடி கூறினார்.

மோடி தன்னுடைய உரையை துவக்கும் போது ஜெய் ஸ்ரீ ராமா என்று முழக்கமிட்டு தனது உரையைத் துவக்கினார். அதை தொடர்ந்து பொதுமக்கள் மோடி மோடி மோடி என்று முழக்கமிட்டனர். தன்னுடைய உரையில் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தினார்.

இந்தியா பெண்களை வழிபடும் நடைமுறையை கொண்டுள்ள நாடு. இங்கு ஒன்பது நாட்கள் நாம் நம்முடைய பெண்களை வழிபடுகிறோம். இந்த உணர்வை மேற்கொண்டு நாம் பெண்களுக்கு கூடுதல் உரிமை கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

பெண்களின் கண்ணியத்தையும் நாம் உயர்த்த வேண்டியது அவசியம். நம்முடைய நாடு முழுக்க பெண்களை வழிபட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெண்களுடைய கௌரவத்தையும் மரியாதையையும் காக்க வேண்டியது, உயர்த்த வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.

விரைவில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. அப்பொழுது நாம் பெண்களின் சக்தியை கொண்டாடப் போகிறோம். பெண்களின் சாதனைகளை பாராட்டி விழா எடுக்கப் போகிறோம். நம்முடைய பெண்கள் சாதித்தவை நமக்கு மேலும் ஊக்கம் தந்து, தருகின்ற வகைகளாக அமையும். அவர்களை நாம் வாழ்த்துவோம்.இதுவே நம்முடைய லட்சுமி பூசையாக அமையும் என்று மோடி கூறினார்.

நம்முடைய விஜயதசமி நாளில் நாம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையும் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நாம் மகாத்மா காந்தியின் பிரியமான பணி ஒன்றை எடுத்து அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக உணவுப் பொருளை வீணடிக்கக் கூடாது, எரிசக்தியை சேமிக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க வேண்டும், பொதுச் சொத்துக்களை நாசம் செய்யக் கூடாது அல்லது நாட்டின் நலனுக்கு சிறந்தது எதுவோ அதை எல்லாம் நாம் செய்யலாம்.

நம்முடைய சுற்றுச்சூழலை நாசம் செய்கிற பிளாஸ்டிக் பொருள்களை நாம் கைவிட வேண்டும். அதனை ஒரு இயக்கமாக நடத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்தியாவின் பண்டிகைகளும் விழாக்களும் பெரிதும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய வகைகளாகும்.

நம்முடைய கலாச்சாரம் துடிப்பு உள்ளது. எனவே நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விழாவும் நமது சமூகத்தை மிகவும் நெருக்கமாக இணைக்கிறது. நம்முடைய குணத்தையும் சிறப்பான வகைகளாக மாற்றியமைக்கின்றன.

பண்டிகை, திருவிழா என்பவை நமது ரத்தத்திலேயே ஊறி போயுள்ளன. இந்திய சமூக வாழ்க்கை என்பது திருவிழாக்கள் நிறைந்தது. அதனால் ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட நாம் இன்னும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் நிற்கிறோம்.

இந்தியாவின் பண்டிகைகள், விழாக்கள் மூலமாக இந்திய கலாச்சாரத்தின் முக்கியமான அம்சங்களை நாம் கொண்டாடுகிறோம். இந்த பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வகையான கலைகளையும் கற்றுக் கொள்ள உதவுகின்றன. இசை பாட்டு நாட்டியம் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.

நம்முடைய கலாச்சாரத்தில் நமது பாரம்பரியப்படி தேவதைகள் உயிருள்ள மனிதர்களாக போற்றப்படுகிறது. அவர்கள் ஒருபோதும் எந்திரங்களாக பிறப்பதில்லை. நம்முடைய கூட்டுக் கலாச்சாரம் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளில் இருந்து நாம் உணர்வு பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ராம்லீலா மேடையில் ராமர் லட்சுமணர் சீதை வேடம் தரித்து இருந்தவர்களுக்கு திலகமிட்டு மோடி பாராட்டினார். ராம்லீலா நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு களித்தார் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரது ராட்சச பொம்மைகள் எரிக்கப்படுவதையும் மோடி பார்வையிட்டார்.