ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும்படி அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 08 அக்டோபர் 2019 19:18

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி இந்திய அரசுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி, இணைய சேவைகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்போது காஷ்மீரின் ஹந்த்வாரா மற்றும் குப்வாரா பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தொலைபேசி சேவைகள் முடங்கியுள்ளன.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவின் செல்வாக்குமிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் கமிட்டி திங்கள்கிழமை டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் :

காஷ்மீரில் தகவல்தொடர்பு சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்களின் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எனவே காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கும் மற்ற இந்தியர்களை போல் உரிய உரிமைகளை வழங்க வேண்டும். காஷ்மீரில் மனித உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க எம்.பி பிரமிளா ஜெய்பால் உட்பட 13 அமெரிக்க எம்.பிக்கள் காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல் குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் கமிட்டியின் ஆசிய பசிபிக் மற்றும் ஆயுத பரவல் தடை துணைக்குழு காஷ்மீர் மற்றும் தெற்காசியாவில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பாக வரும் அக்டோபர் 22ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.