பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – சீன பிரதமர் லீ கெகியங் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 08 அக்டோபர் 2019 17:48

பெய்ஜிங்

சீனா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்கை இன்று சந்தித்துப் பேசினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக வரும் அக்டோபர் 11ம் தேதி இந்தியா செல்கிறார். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் அரசுமுறைப் பயணமாக சீனா வந்துள்ளார். இன்று காலை சீனா வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீன பண்பாட்டுத்துறை அமைச்சர் லுயோ ஷுகாங்க் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கான சீன தூதுவர் யா ஜிங் இருவரும் வரவேற்றனர்.

பின்னர், சீன பண்பாட்டுத்துறை அமைச்சர் லுயோ ஷுகாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சீன மக்கள் அரங்கத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சீன பிரதமர் லீ கெகியாங்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் பிரதமர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பில், பிராந்திய பிரச்சனைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. சீன அதிபர் இன்னும் 3 தினங்களில் இந்தியா வரவுள்ள நிலையில், இம்ரான் கானின் சீன பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.