ஹாங்காங் நகரில் முகமூடி அணிய விதிக்கப்பட்ட தடையை மீறிய இருவர் கைது

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019 19:05

ஹாங்காங்

ஹாங்காங் நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் போது முகமூடி அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என அரசு விதித்த தடையை மீறிய மாணவர் ஒருவரும் 38 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹாங்காங் அரசு முகமூடி அணிய தடை விதித்த போது அதனை எதிர்த்து ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆனால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஹாங்காங் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது. நீதிமன்றம் நிராகரித்த போதிலும் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பலர் முகமூடியுடன் ஆர்ப்பாட்டங்களில் பங்குகொண்டனர் .

அவர்களை போலீசாரோ ராணுவ வீரர்களோ கைது செய்யவில்லை . ஆனால் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடந்த பொழுது முகமூடி அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரில் ஒருவர் மாணவர். மற்றொருவர் வேலையில்லாத 38 வயது பெண்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டனர் அவர்களுக்கு நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக கூடியதற்காக 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமாக முகமூடி அணிந்ததற்காக ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஒட்டுமொத்தமாக இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட வாய்ப்பு உள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீனில்  நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

 முகமூடி தடை உத்தரவு போன்ற மேலும் பல கடுமையான தடைகள் வெளிவரலாம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர் . பழங்கால சட்டங்களின் அடிப்படையில் புதிய சூழ்நிலைகளில் தண்டனை விதிப்பது, கைது செய்வது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.