கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 200

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019

பொன் மாலை பொழுதில் ஒரு ஈகோ யுத்தம்!

பி. சுசீலா திரைப்­பா­டல் பாடத்­தொ­டங்கி 65 வரு­டங்­கள் ஆகின்­றன என்ற அடிப்­ப­டை­யில்,   ‘லயா மீடியா’ என்ற நிறு­வ­னத்­தால் ஒரு நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது. சுசீ­லா­வின் வெற்­றிப் பாடல்­க­ளைப் பல பாட­கி­கள் பாடி­னார்­கள். அது­மட்­டும் இல்­லா­மல் சுசீ­லா­வுக்கு புகழ் மாலை­க­ளும் சூட்­டப்­பட்­டன.

சுசீ­லாவை வாழ்த்த அழைக்­கப்­பட்ட  இளை­ய­ரா­ஜா­வும் வைர­முத்­து­வும் அவரை வாழ்த்­திய  அதே நேரத்­தில், ஒரு­வ­ரை­யொ­ரு­வர்  மறை­ முக­மா­கத் தாக்­கிக்­கொண்­டார்­கள். இது நிகழ்ச்­சி­யின் சுவா­ரஸ்­ய­மான அம்­ச­மாக உரு­வா­னது. இத­னால், நிகழ்ச்­சியை சின்­னத்­தி­ரை­யில் வழங்­கிய ஜீ டி விக்­கான யூ டியூப் ஹிட்­டு­கள் எகிறி உச்­சத்­தைத் தொடக்­கூ­டும்!

இளை­ய­ராஜா, வைர­முத்து ஆகி­யோ­ரி­டையே பிணக்கு என்­பது புதி­தல்ல. இந்த முறை நடந்­தது  நேரடி மோதல் அல்ல. ஒரே மேடை­யில் இரு­வ­ரும் இருக்­கும் போது ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக்­கொண்ட குடு­மிப்­பிடி சண்டை இல்லை.

இளை­ய­ராஜா தன்­னு­டைய சொல்­லம்­பைத் தொடுத்த போது வைர­முத்து மேடை­யில் இல்லை.  பார்­வை­யா­ள­ராக அரங்­கில் அமர்ந்து கொண்­டி­ருந்­தார்.

தன் பங்­கிற்கு அவர் இளை­ய­ராஜா மீது பாணம் தொடுக்­கும் போது, இளை­ய­ராஜா கிளம்­பி­விட்­டி­ருந்­தார். ஆனால், வைர­முத்து யாரை மறை­மு­க­மா­கத் தாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார் என்­பதை குழு­மி­யி­ருந்­தோர் அறி­யத்­தான் செய்­தார்­கள். பி. சுசீ­லாவை வாழ்த்த அவ­ரு­டன் மேடை­யில் இளை­ய­ராஜா இருந்­த­போது, அவர்  அடிக்­க­டிக் குறிப்­பி­டும், ‘மாலைப்­பொ­ழு­தின் மயக்­கத்­திலே’ பாடலை மீண்­டும் உதா­ர­ணம் காட்­டி­னார்.

‘‘இள­மை­யெல்­லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்­தது  சில காலம் தெளி­வும் அறி­யாது முடி­வும் தெரி­யாது மயங்­குது எதிர்­கா­லம்’’ என்ற வரி­க­ளைச் சுட்­டிக் காட்டி, அது பதி­னான்கு யதில் தான் எதிர்­கொண்ட நிலையை அப்­ப­டியே பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கூறி­னார். ‘‘கவி­ஞ­ரைப் போல், கவி­ஞர் கண்­ண­தா­ச­னைப்  போல், உல­கத்­தி­லேயே ஒரு கவி­ஞன் கிடை­யாது... ஏனென்­றால், பாட­லின் மெட்­டைக் கூறு­கி­ற­போதே  பாட­லின் வரி­களை வழங்­கக்­கூ­டி­ய­வர் அவர் ஒரு­வர்­தான்,’’ என்­றார் இளை­ய­ராஜா. கண்­ண­தா­சனை அவர் இப்­ப­டிப் புகழ்ந்­தது, வைர­முத்­துவை மட்­டம்

தட்­டிக் கொண்­டி­ருக்­கி­றாரோ என்று நினைக்க இடம் கொடுத்­தது.

 வைர­முத்து உட்­பட பல திரைப் பாட­லா­சி­ரி­யர்­கள் தன்­னு­டைய மெட்­டுக்­க­ளுக்கு வரி­கள் எழுத எவ்­வ­ளவு நேரம் எடுத்­துக் கொண்­டார்­கள் என்­பது இளை­ய­ரா­ஜா­வுக்­குத் தெரிந்த விஷ­யம்­தான்.  ஆனால், தமிழ்ப் பாட­லா­சி­ரி­யர்­கள் தன்­னு­டைய மெட்­டுக்­க­ளு­டன் எப்­ப­டி­யெல்­லாம் போராடி அவற்­றுக்­கான வரி­களை எழு­தி­னார்­கள் என்று உதா­ர­ணம் காட்­ட­வில்லை இளை­ய­ராஜாதான். ‘திரு­வா­ச­க’த்­திற்கு இசை­ய­மைத்த போது, ஆங்­கி­லத்­தில் பாடல் வரி­கள் எழுதி வாங்­கி­ய­தைக் குறிப்­பிட்­டார்.   ஸ்டீபென் ஸ்வார்ட்ஸ் என்ற அமெ­ரிக்க பாட­லா­சி­ரி­யர்,

‘திரு­வா­சக’ வரி­களை ஆங்­கி­லத்­தில் படைக்க  மூன்று மாதங்­கள் எடுத்­துக்­கொண்­டார் என்று  குறிப்­பிட்­டார். இளை­ய­ராஜா தெரி­விக்க முன்­வந்த முக்­கி­ய­மான விஷ­யம், கண்­ண­தா­சனை மிஞ்­சி­வி­ட­லாம் என்று எவ­ரும் பகற்­க­னவு காணக்­கூ­டாது என்­கிற விஷ­யம்­தான்.

‘‘கண்­ண­தா­சன்­தான் கவி­ய­ரசு...கவிப்­பே­ர­ரசு என்று யார் வேண்­டு­மா­னா­லும் தன்­னைக் குறிப்­பிட்­டுக் கொள்­ள­லாம். ஆனால் அவை­யெல்­லாம் வெறும் கன­வு­ம­யம்­தான். கண்­ண­தா­சனை எவ­னும் பீட் செய்­து­வி­ட­வில்லை...’’ என்று நேர­டி­யாக இளை­ய­ராஜா கூற­வில்லை. ஆனால் அவர் சொல்ல வந்த மெசேஜ் அது­தான்.

இளை­ய­ராஜா அரங்கை காலி செய்­த­பின், வைர­முத்து மேடை ஏறி­னார். என்­ன­தான் தமிழ் உச்­ச­ரிப்பு உயர்ந்து விளங்­கும்­படி தமிழ் பாடி­னா­லும், தான் தெலுங்­கச்­சி­தான் என்ற நினைவு சுசீ­லா­வுக்­குப் எப்­பொ­ழு­துமே உண்டு. அவ­ரு­டைய பேச்­சுத்­த­மிழ் அதை நினை­வு­ப­டுத்­திக்­கொண்டே இருக்­கும்.  பல கார­ணங்­க­ளால் தமி­ழின் இன்­றைய ஒரு அடை­யா­ள­மாக மாறி­விட்ட வைர­முத்­து­வின்     வாழ்த்து அவ­ருக்­குப் பிடித்த ஒன்று. சுசீலா என்­றால் அழைக்­கா­ம­லேயே கூட வரக்­கூ­டி­ய­வர் வைர­முத்து. அழைத்­தால் வரா­மலா இருப்­பார்?

‘‘சுசீ­லா­வின் குர­லைக் கேட்­டி­ரா­விட்­டால், நான் ஆடு, மாடு  மேய்த்­துக்­கொண்­டி­ருப்­பேன்,’’ என்­றார் வைர­முத்து.

‘‘குயிலே ஒரு போலி­தான், சுசீ­லா­தான் அசல்,’’ என்­றார்.

‘‘இந்த அம்­மை­யார் மட்­டும் இல்­லை­யென்­றால் தமி­ழின் ருசி எனக்கு விளங்­கி­யி­ருக்­காது, ’’ என்­றார்.

அப்­ப­டி­யென்­றால் ஈ.வே.ரா. உறித்த வெங்­கா­யம், அண்ணா பொழிந்த தமிழ் மழை, கலை­ஞர் விரித்த தமிழ் வலை ஆகி­யவை எல்­லாம் வீண்­தானா என்று கேட்­டால், சிச்­சு­வே­ஷ­னுக்­குத் தகுந்­த­வாறு வரி­க­ளைப் புனை­ப­வன்­தான் சினிமா பாட்­டுக்­கா­ரன் என்­பதை நினை­வில் கொள்­ள­வேண்­டும்.  

கண்­ட­னத்­தின் காழ்ப்­பு­ணர்ச்சி இல்­லா­மல், ஏள­ன­மும் எகத்­தா­ள­மும்  இல்­லா­மல், பண்­பாட்­டின் முகத்­தில் உமி­ழா­மல்... மது­ர­சத்­து­ட­னும் தேனின் மாதுர்­யத்­து­ட­னும் வரக்­கூ­டிய தமிழ், சுசீ­லா­வின் திரை­யி­சைத்­த­மிழ் என்று வைர­முத்து பதில் தந்­தால், ஏற்­ப­தைத் தவிர வேறு வழி­யில்லை. ஏற்­பது இகழ்ச்சி என்­பது இங்கே பொருந்­தாது. எற்­பது மகிழ்ச்சி என்று தான் கூற­வேண்­டும்! உச்­சா­ணிக்­கொம்­பில் சுசீ­லாவை ஏற்­றி­வைக்­கும் போது, இந்த சுசீ­லாப்­பி ­ரி­ய­னின் இல்­லத்­திற்கு சுசீ­லாவே ஒரு நாள் எழுந்­த­ரு­ளிய வைப­வத்தை வைர­முத்து விவ­ரித்­தார். மகன் ஜெய­கி­ருஷ்­ணா­வு­டன் வந்த சுசீலா,  வந்த காரி­யத்தை விவ­ரித்­தா­ராம்.

கண­வர் டாக்­டர். மோகன் ராவ் கால­மாகி ஓராண்டு ஆகப்­போ­கி­றது...அது குறித்­துப் பல­ருக்கு மடல் அனுப்ப வேண்­டும்...நீங்­கள் ஒரு மடல் எழு­தித்­தர வேண்­டும், என்­றா­ராம் சுசீலா. இதற்கு வைர­முத்து, அதி­கம் யோசிக்­க­வில்லை.

‘‘எட்­ட­டுக்கு மாளி­கை­யில்

ஏற்றி வைத்த என் தலை­வன்

வீட்­டு­விட்­டுச் சென்­றா­னடி, இன்று

வேறு­பட்டு நின்­றா­னடி, இப்­ப­டிக்கு சுசீலா,’’ என்று எழு­திக்­கொ­டுத்­தா­ராம் !

‘‘மறைந்­து­விட்ட என் கண­வ­ரின் வழி­காட்­டு­தலை தொடர்ந்து உணர்­கி­றேன்.  கண­வர் மறைந்து ஓராண்டு ஆகும் இந்­தத் தரு­ணத்­தில், அவ­ரு­டைய ஆசி­க­ளு­டன் உங்­கள் நல்­லெண்­ணத்­து­ட­னும் தொடர்ந்து நடை போடு­கி­றேன்,’’ என்­ப­து­தான் கலை­யு­ல­கத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் சுசீலா போன்ற இசை நட்­சத்­தி­ரங்­க­ளின் பாதை­யாக இருக்க முடி­யும். இந்த நிலை­யில், எட்­ட­டுக்கு பாடலை எடுத்து வைத்து அவரை நிரந்­தர கைம்மை கோலத்­தில் காட்ட அவ­சி­யம் இல்லை.  

ஆனால் வைர­முத்­து­வைப் பொறுத்­த­வரை, ஒரு கண்­ண­தா­சன் பல்­லவி ரெடி­மே­டாக அவ­ருக்­குக் கிடைத்­து ­விட்­டது. யோசிக்­க­வேண்­டிய அவ­சி­யம் இன்றி எழு­திக்­கொ­டுத்­து­விட்­டார். காசு வாங்­கா­மல் எதை­யும் சொந்­த­மாக எழு­து­வ­தில்லை என்ற விர­தம் இருந்­தாரோ என்­னவோ!

நிகழ்ச்­சிக்கு வரு­வோம். கண்­ண­தா­சன்­தான் தமிழ் சினி­மா­வின் மிகப்­பெ­ரிய கவி­ஞர்...பின்பு வந்­த­வர்­கள் எல்­லாம் அப்­ப­டி­யல்ல என்று கூறிச்­சென்ற இளை­ய­ரா­ஜா­வுக்­குத் தன்­னு­டைய பதிலை நன்­றாக யோசித்தே பேசி­னார், வைர­முத்து. ‘‘உல­கத்­திலே கண்­ண­தா­சன் சிறந்த கவி­ஞர் என்­ப­தில் எங்­க­ளுக்­கும் வேறு­பாடு இல்லை,’’ என்­றார்! அப்­ப­டியா? அப்­ப­டி­யென்­றால், கவி­ய­ர­சரை கீழே தள்­ளு­வ­து­போல் அமைந்த கவிப்­பே­ர­ரசு டைட்­டிலை ஏற்­றது எப்­படி? இதன்­பின், வைர­முத்து அடுத்து தொடுத்த பிரம்­மாஸ்­தி­ரம், அல்­லது அக்னி, பிரு­தவி, அமோகா, ஆகாஷ் ஏவு­கணை வெளிப்­பட்­டது.

‘‘....ஆனால் உல­கத்­தின் மிகச் சிறந்த  இசை­ய­மைப்­பா­ளர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் என்­ப­தைத் தவிர யாருக்­கும் கருத்து வேறு­பாடு இல்லை....  ’’என்­றார் வைர­முத்து (வாக்­கிய அமைப்பு கொஞ்­சம் உதைக்­கி­றதே என்று நீங்­கள் நினைத்­தால், அது என் தவறு அல்ல. வைர­முத்து பேசி­யதை அப்­ப­டியே தந்­தி­ருக்­கி­றேன்).

‘‘நீ என்னை கண்­ண­தா­ச­னுக்­குக் கீழே இறக்­கு­கி­றாயா, நான் உன்னை விஸ்­வ­நா­த­னுக்­குக் கீழே தள்­ளு­கி­றேன் பார்’’, என்­பது போன்ற பதில் தாக்­கு­தல் இது. ஆனால் இளை­ய­ரா­ஜாவே இதை­விட   விஸ்­வ­நா­த­னி­டம்  தன்­னைத் தாழ்த்­திப் பேசி­யி­ருக்­கி­றாரே! அதை­யும் விஸ்­வ­நா­த­னின் முன்­னி­லை­யில்,  பொது வெளி­யில் செய்­தி­ருக்­கி­றாரே!  ‘‘அண்ணே...நாங்க செஞ்­ச­தெல்­லாம் உங்க எச்­சில்’’, என்று கூறி­யி­ருக்­கி­றாரே !

எம்.எஸ்.வி.தான் மிகச்­சி­றந்த இசை­ய­மைப்­பா­ளர் என்று வைர­முத்து கூறிய போது, இளை­ய­ரா­ஜாவை வைர­முத்து ‘அட்­டாக்’ செய்­கி­றார் என்று வந்­த­வர்­கள் சிரித்­துக் கொண்­டார்­களே தவிர, வைர­முத்­து­வின் இந்­தத் தாக்­கு­த­லில் வீரி­யம் இல்லை. ஏனென்­றால், எம்.எஸ்.வியை­விட நான் சிறந்­த­வன் என்று இளை­ய­ராஜா என்­றைக்­கும் கூறி­ய­ தில்லை. ‘மெல்­லிசை மாமன்­னன்’ என்­பது போன்ற பட்­டத்தை ஏற்­ற­தில்லை!

ஆனால் கடை­சி­யில், கலை­யைக் குறித்­தும் உணர்­வு­க­ளின் கொலை­யைக் குறித்­தும் வைர­முத்து  கூறிய விஷ­யங்­கள் சிந்­த­னைக்­கு­ரி­யவை.    குழந்தை போன்ற தன்மை உள்­ள­வர் சுசீலா (அப்­ப­டியா?), என்ற வைர­முத்து, ‘‘தந்­தி­ரம் உள்­ள­வன் கலை­ஞன் ஆகி­றான். பல கலை­ஞர்­கள் சூது வாது மிக்­க­வர்­கள். சூது­வா­தும் கலை­யின் ஒரு கரு­வி­யா­கி­றது,’’ என்­றார். யாரை மன­தில் கொண்டு அவர் இப்­ப­டிப் பேசி­யி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தில் யாருக்­கும் சந்­தே­கம் இல்லை!

அதே போல், ‘பா’ வரி­சைப் படங்­க­ளைக் குறிப்­பிட்டு,  ‘‘இந்த அம்­மை­யா­ரும் டி.எம்.எஸ்­சும் பாடிய பாடல்­க­ளால், தமிழ்­நாட்டு வானமே செழித்­தது’’ என்­றார் வைர­முத்து.

இதில் டி.எம்.எஸ்­சின் பெயரை வைர­முத்து மேற்­கோள் காட்­டி­ய­தும் கூட, இளை­ய­ராஜா மீதான ஒரு மறை­மு­கத் தாக்­கு­தல்­தான். ஏனென்­றால், டி.எம்.எஸ்­சின் பின்­ன­ணிப்­பாட்டு அத்­தி­யா­யத்தை ஏறக்­கு­றைய முடி­வுக்­குக் கொண்டு வந்­த­வரே இளை­ய­ரா­ஜா­தான்!  இந்­தக் கதை­கள் எல்­லாம் முடிந்­த­விட்ட தற்­கா­லத்­தில், ஒரு கல்­லூரி விழா­வில்,  தன்­னு­டைய மறக்க முடி­யாத முதல் வெளி­நாட்டு அனு­ப­வத்­தைக் குறித்­துப் பேசி­னார் இளை­ய­ராஜா.

திரை இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­கம் ஆன புதி­தில், மலே­சி­யா­வில் ஒரு மெல்­லிசை நிகழ்ச்சி. டி.எம்.எஸ்­சும் பங்­கேற்­றார். அப்­போது, ‘‘பத்­தா­யி­ரம் பேர் திரண்­டி­ருந்த ஸ்டேடி­யத்­திலே இசை­ய­மைப்­பா­ளர் ஜி. ராம­நா­த­னு­டன் ஒப்­பிட்டு டி.எம்.எஸ். என்னை  மட்­டம் தட்­டி­னார்,’’ என்­றார் இளை­ய­ராஜா. நாவி­னால் சுட்ட வடு நாற்­பது ஆண்­டு­கள் ஆகி­யும் ஆற­வில்லை!

ஆனால் 1976ல் டி.எம்.எஸ். தன்னை கேவ­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும், சிவாஜி நடித்த படங்­க­ளுக்கு இசை­ய­மைக்­கும் வாய்ப்பு வந்­த­போது,  டி.எம்.எஸ்சை இளை­ய­ராஜா பயன்­ப­டுத்­தத் தவ­ற­வில்லை. ‘‘சிவா­ஜி­யின் மார்க்­கெட்­டைப் பிடிப்­ப­தற்­காக என்­னைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டார்,’’ என்­பார் டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன். இதைத்­தான், கலை­யில் உள்ள தந்­தி­ரம் என்­றார் வைர­முத்து. கவலை என்ற வாழ்க்­கை­யின் இடை­வி­டாத தொடர்ச்­சியை மறக்­கக்  கலையை நாடு­கி­றார்­கள் மக்­கள். அதை கலை­ஞர்­கள் அவர்­க­ளுக்கு வழங்­கு­கி­றார்­கள். ஆனால் கலை­ஞர்­க­ளை­யும் கவ­லை­கள் ஆட்­டிப்­ப­டைக்­கின்­றன!  இத்­த­கைய கவ­லை­களை ஏற்­ப­டுத்­தும் ஆசா­பா­சங்­களை உத­றித்­தள்ளி, தியா­கப் பிரம்­மம் போன்ற இசை மேதை­கள், உஞ்­ச­வி­ருத்தி எடுத்­துண்டு, நாத­வெள்­ளத்­திலே நிச்­ச­ல­மாக நீந்­திக் கொண்­டி­ருந்­தார்­கள்.

‘‘அடுத்த ெஜன்­மத்­தி­லா­வது, என்­னு­டைய ஆர்­மோ­னி­யத்தை எடுத்­துக்­கொண்டு, கட­லோ­ர­மா­கக் கவ­லை­யின்­றிப் பாடித்­தி­ரி­ய­வேண்­டும்,’’ என்ற ஆசையை என்­னி­டம் வெளி­யிட்­டார் விஸ்­வ­நா­தன்.  பவல்­கள் எனற வங்­கா­ளப் பாடல் மர­பி­னர், எந்த இடத்­தி­லே­யும் நிரந்­த­ர­மா­கத் தங்­கா­ம­லும், சாதா­ரண மக்­க­ளின் அவ­லக்­க­வ­லை­க­ளு­டன் ஒட்­டா­ம­லும், வெட்ட வெளி­யில் இஷ்­டம்­போல் பாடிச்­சென்­றார்­கள்.  இன்­றும் செல்­கி­றார்­கள்.

(தொட­ரும்)