![]() | ![]() |
அப்போது அந்தப் படத்தின் நடன ஆசிரியர் `நம்ம இந்த படத்துல பழைய பாடல் ஏதாவது முத்துத்தாண்டவர் பதம் மாதிரி ஒன்றை எடுத்துப் போட்டுக் கொள்ளலாம்’ என்று சுப்பையா நாயுடுவுடன் சொன்னார்.
வாலிக்கு கோபம் வந்துவிட்டது. உடனே சுப்பையா நாயுடு வாலியின் கோபத்தை கட்டுப்படுத்தி அவர் காதில் ஒரு ரகசியம் சொன்னார். வாலியும் கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனார்.
சுப்பையா நாயுடு வாலியின் காதில் சொன்ன ரகசியம் “நீ பாட்டு எழுதிக் கொடு. நான் பழைய பாட்டுன்னு சொல்லி உள்ளே நுழைச்சிடறேன்.. பிறகு 1986 – 87 வருடங்களில் இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக் குழுவில் அந்த நடன ஆசிரியர் கமிட்டி மெம்பர்.
ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது “அந்தப் படத்தில் ஒரு பழைய பாடலை பாரதத்திற்கு பயன்படுத்தலாம். வாலி பாடல் வேண்டாம் என்று சொன்னதற்காக வாலி என்னை நீங்கள் திட்டக்கூடாது’’ என்று வாலியிடம் சொல்ல, அப்போதுதான் அவரிடம் உண்மையைச் சொன்னார். அவருக்கு ஒரே ஆச்சரியம் அந்த நடன ஆசிரியர் வேறு யாருமில்லை வழுவூர் ராமையா பிள்ளை.
வாலிக்கு தனக்கு முந்தைய கவிஞர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. அதில் ஒருவர் கம்பதாசன். இவர் அந்தக் காலத்தில் இந்தி பாடல்கள் தமிழில் வரும் போது அதற்காக அதே இசைக்கு வாயசைப்பிற்காக தமிழ் பாட்டு எழுதுவதில் பெயர் வாங்கிய கவிஞர்.
`வித்யாபதி’ `மங்கையர்க்கரசி’ போன்ற படங்களில் நடித்தவர். மலையாள கவிஞர் வள்ளத்தோள் வீட்டில்தான் திருமணம் செய்திருந்தார். பிறகு விவாகரத்து ஆகிவிட்டது.
![]() | ![]() |
1955- – 56` புலித்தேவன்’ ` மேக்னெட்’ ராஜாராம் நண்பர் மூலமாக ஒரு டப்பிங் படத்திற்கு பாட்டு எழுதலாம் என்று உஸ்மான் ரோட்டில் திலக் தெருவில் இருக்கிற சினிமா ஆபீசுக்கு வாலி போனார்.
தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அங்கே போய் உட்கார்ந்து இருப்பார்.
அங்கே பாட்டு எழுதுவதற்கு இரவில் கம்பதாசன் வருவார். அவர் சொல்லுவார். வாலி எழுதுவார். வாலி, ஆதிமூலம், கம்பதாசன் மூணு பேரும் அந்த அலுவலகத்தில் தங்கியிருந்தார்கள்.
ஒரு நாள் இரவு கம்பதாசன்` சும்மா காத்தாட நடக்கலாம் ’என்று சொல்லி வாலியை அழைத்தார். இருவரும் வாணி மஹால் வரை நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் போதையில் இருந்தார். அப்போது ரோந்து வந்த போலீஸ்காரர்கள் இருவரையும் பிடித்து பாண்டிபஜார் ஸ்டேஷன் லாக்கப்பில் வைத்து விட்டார்கள்.
பிறகு மறுநாள் அதிகாலை சப்-–இன்ஸ்பெக்டர் இவர்களைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். பிறகுதான் இவர்களை ரிலீஸ் செய்தார்கள்.
ஒரு பெரிய கவிஞரோடு சிறைவாசம் செய்தார். ஆனால் கம்பதாசன் கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த நேரத்தில் வாலியிடம் வந்து பதினைந்து ரூபாய், இருபது ரூபாய் கேட்பார். நூறு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார். கலைஞரை பேர் சொல்லித்தான் அழைப்பார். `கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே’ போன்ற பாடல்களை தந்தவர் கம்பதாசன். வாலி கே. வி. மகாதேவனுக்கு அறிமுகமானது வேறு வகை. மா.ரா என்று ஒரு திரைப்பட எழுத்தாளர் இருந்தார். அவர்தான் வாலியை கே. வி. மகாதேவனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆரம்பத்தில் கே. வி. – மகாதேவன் வாலியை சரியாக நடத்தவில்லை. என்னையா வாலி, கோலின்னு யார் யாரையோ கூட்டிட்டு வறீங்க. உங்களுக்கு பணம் பண்ணணும்னு ஆசை இல்லையா’ என்று வாலி காதுபடவே பேசினார் கே.வி. மகாதேவன். இருந்தாலும் அவர்களுக்கு வாலி பாட்டு எழுதி கொடுத்துவிட்டு வந்தார். அந்தப் பாடல்தான் வாலி கேவி மகாதேவனுக்கு எழுதிய முதல் பாடல். அதற்குப் பிறகு வாலி விஸ்வநாதன் – ராமமூர்த்தியால் `கற்பகம் ’படம் மூலம் பாப்புலராகி விட்டார். அப்போது சரோஜாதேவி நடித்த `உடன்பிறப்பு’ படம் பூஜை போடப்பட்டது. அந்தப்படத்துக்கு டைரக்டர் கே. பாலச்சந்தர்தான் வசனம்.
படபூஜை முடிந்தவுடன் தட்டில் பழம் எல்லாம் வைத்து பணம் கொடுத்தார்கள். வாலி `விஸ்வநாதன் ராமமூர்த்தி வரவில்லையா?’ என்று கேட்டார். `இல்லை இந்தப் படத்திற்கு மாமாதான் மியூசிக்’ என்றார்கள்.
அந்த காலத்தில் கே. வி. மகாதேவனை ‘மாமா’ என்றுதான் சினிமா வட்டாரத்தில் அழைப்பார்கள். வாலி பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ‘நான் பாடல் எழுதமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். அங்கிருந்து கிளம்பி போய்விட்டார். உடனே இந்த செய்தி எம்.ஜி.ஆருக்கு தெரியவர, அவர் வாலியை தோட்டத்திற்கு வரச்சொன்னார்.
வராத அந்த படத்திற்கு கதாநாயகன் எம்.ஜி.ஆர் தான். வாலியும் போனார் `நீங்காத நினைவு’ படத்துக்கு பாட்டு எழுத போகும் போது கே. வி. எம் என்னை கிண்டல் பண்ணது இன்னமும் நீங்காத நினைவாக இருக்கு. அதனால என்னால எழுத முடியாது’ என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னார் வாலி. உடனே எம்ஜி.ஆர்., `நீங்க கேவிஎம்முக்காக எழுத வேண்டாம். எனக்காக எழுதிக் கொடுங்க’ என்று கேட்டார். வாலி இரண்டு பாட்டு எழுதிக் கொடுத்தார்.
ஒரு நாள் புகழேந்தி – இவர்தான் கே.வி. மகாதேவனின் மனசாட்சி, நிழல் எல்லாமே அவருக்கு புகழேந்திதான்.
அவர் வாலியிடம் போனார். `மாமா உங்களை பார்க்கணும்னு சொல்கிறார்’ என்றார். வாலியும் போனார். மகாதேவன் வாலியைப் பார்த்து கண்ணீர் விட்டார்.` என்னை தப்பா நினைச்சுக்காதீங்க’ என்று சொன்னார். வாலி அதற்கு இதுல தப்பா என்ன நினைக்கிறது’ என்றார் அடுத்து என்ன நடந்தது? – தொடரும்