விஸ்வரூபம் எடுக்கும் வெங்காய பிரச்சனை

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019

விஸ்வரூபம் எடுக்கும் வெங்காய பிரச்சனை

இந்திய அரசியலுக்கும் வெங்காயத்துக்கு என்றும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது போலும். இந்தியாவில் வெங்காய விலை உயர்ந்தால், அதுவும் தேர்தல் சமயத்தில் உயர்ந்தால் அரசியல் தலைவர்களுக்கு அது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

வெங்காய விலையைக் குறைக்க  அல்லது உயர விடாமல் தடுக்க என்ன செய்வது என்று மந்திராலோசனைக் கூட்டங்களை அரசியல் தலைவர்கள் படுவேகமாக நடத்தி, முடிவுகளை அமல்படுத்துகிறார்கள்.

வெங்காய விலை இந்தியாவில் உயர தொடங்கியதும் பாஜக அரசு மின்னல் வேகத்தில் முடிவுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை வருகிறது என்று யூகச் செயதிகள் பரப்பப்பட்டன.

அதனால் ஏற்றுமதியை தடை செய்தபொழுது அது பழைய செய்தி என்ற உணர்வு மக்களுக்கு தோன்றியது.

அடுத்தது, வியாபாரிகள் கையிலிருக்கும் வெங்காய கையிருப்புக்கு வரம்பு, உச்சவரம்பு கட்டும் வகையில் அறிவிப்புகள் வெளியானது. இந்த அதிவேக நடவடிக்கைகள் காரணமாக வெங்காய விலை குறையத் தொடங்கியது. ஏற்றுமதியைத் தடுத்த காரணத்தினால் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை அனுப்ப முடியவில்லை.

உச்சவரம்பு என்ற காரணத்தினால் வியாபாரி தன்னுடைய சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்க முடியவில்லை. வெங்காயம்  அதிகமாக இருந்தால் அரசு அதிகாரிகள் பதுக்கல் என்று நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற பயம் வியாபாரிகளுக்கு வந்தது. அதனால் வெங்காயம் வீதிக்கு வந்தது. விலை குறையத் தொடங்கியது. வழக்கமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் வாயை மூடிக்கொண்டு அமைதி காப்பார்கள்.

விவசாயிகளின் எதிர்ப்புக்குரல்

விவசாயிகளின் எதிர்ப்புக்குரல் உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும்  மகாராஷ்டிர மாநிலத்தில் கிளம்பி உள்ளது. அங்கு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் டன் வெங்காயம் விளைவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய வெங்காய மண்டி மகாராஷ்டிர மாநிலத்தில் தான் உள்ளது லாசல்கான் என்ற நகரில் இந்த வெங்காய மண்டி அமைந்துள்ளது. இங்கே உள்ள வியாபாரிகள் ஒரு நாளைக்கு 10,000 டன்கள், 100,000 டன்கள் கூட வெங்காயத்தை கொள்முதல் செய்வார்கள். ஆனால் இப்பொழுது 500 குவிண்டாலுக்கு மேல் அவர்கள் இருப்பு வைக்க கூடாது என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

 இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சங்கம் போர்க்குரல் இன்று எழுப்பியுள்ளது. அந்த விவசாயிகள் சங்கத்துக்கு ‘ஷேத்காரி சங்கதானா’ என்று பெயர். அதன் தலைவர் அனில் கார்வால். அவர் மகாராஷ்டிர மாநில அரசுக்கு எச்சரிக்கை வெளியிடவில்லை, ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் ஏற்றுமதித்  தடை நீக்கப்பட வேண்டும் வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கு அறிவித்துள்ள  உச்சவரம்பு ஆணைகளும் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.

இந்த 2 கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள எல்லா வெங்காய விற்பனை கடைகளும் கால வரம்பு இல்லாமல் மூடப்படும் என்று அனில் கார்வால் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் மற்ற நாடுகளை போல அல்லாமல் பெருமளவில் ஒரு உணவுப் பொருள் போல வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

வெங்காயத்தை பயன்படுத்தும் மத்தியதர வர்க்க நுகர்வோருக்கு விலை உயர்வு சுமையாகி விடக்கூடாது என்பதற்காக அரசு அதிவேகமாக நடவடிக்கைகளை எடுத்து வெங்காய விலையைக் குறைத்துள்ளது.

அரசின் நடவடிக்கை காரணமாக மத்தியதர வர்க்கத்தில் நுகர்வோருக்கு வெங்காயம் குறைந்த விலையில் கிடைக்கலாம். ஆனால் அதே வெங்காயத்தை நிலத்தில் விதைத்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்து அறுவடை செய்து எல்லா மக்களுக்கும் கிடைக்கும் வகையில் உதவுகிற விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் அல்லவா?

அந்த விலை கிடைக்கவில்லை என்பதுதான் விவசாயிகளின் கோபம். மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் தங்கள் நெருங்கிய நண்பர்களான வியாபாரிகளுக்கும் சேர்த்து தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வெங்காயம் விளைவிக்கின்ற விவசாயிகளுக்கும் கட்டுபடியாகும் விலை கிடைக்கவில்லை.

அவற்றை விற்க கூடிய வியாபாரிகளுக்கும் கூடுதலான லாபம் கிடைக்க வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடிக்கடி தோன்றும் வெங்காய விலை பிரச்சனைக் குறித்து சற்று ஆழமாக பார்க்க வேண்டியது அவசியம்.

உலக அளவில் வெங்காயம் விளைவிக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 10.64 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் வெங்காயம் விளைவிக்கப் படுகிறது.

வெங்காய உற்பத்தி அல்லது விளைச்சலில் முதல் இடத்தில் உள்ள நாடு சீனா. அங்கு வெங்காயம் விளைவிக்கப்படும் நிலத்தின் பரப்பு 9.3 லட்சம் ஹெக்டேர்தான்.

 இந்தியாவை விட குறைந்த நிலப்பரப்பில்தான் சீனாவில் வெங்காயம் விவசாயம் நடக்கிறது.

ஆனால் சீனாவில் 2 கோடி டன்களுக்கு மேலே வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சீனாவை விட கூடுதலாக 10.6 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தியாவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அறுவடையாகும் வெங்காயத்தின் அளவு 1.5 கோடி  டன்கள்தான்.

சீனாவின் வெங்காய உற்பத்தி திறன்  22 சதவீதம்  என மதிப்பிட்டுள்ளனர் இந்தியாவில் வெங்காய உற்பத்தி திறன் 14.2 சதவீதம் தான் என மதிப்பிட்டுள்ளனர்.

உலக அளவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 26.9 9% சீனாவில் உற்பத்தியாகிறது.

உலக அளவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் இந்தியாவில் 19.90 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது.

வெங்காயம் கையிருப்புக்கு உச்சவரம்பு

இந்தியாவில் 1 கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் மத்திய அரசு பதறியடித்துக்கொண்டு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. வியாபாரிகள் கையிருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு அறிவித்தது.

சில்லரை வியாபாரிகள் 100 குவிண்டால் வெங்காயம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

1 குவிண்டால் என்பது 100 கிலோ தான். இந்த இருப்பு அளவுகளை தாண்டி வியாபாரிகள் வெங்காயத்தை தங்கள் கடைகளில் கிடங்குகளில் வைத்திருந்தால் அதற்கு பதுக்கல் என்று பெயர் வைத்து, போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

இப்படிக்கு திடீர் நடவடிக்கைகளை எடுத்து வெங்காய ஏற்றுமதி இந்தியாவில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

வெங்காயம் ஏற்றுமதி தடுக்கப்பட்ட வெளி நாடுகளில் பங்களாதேஷூம் ஒன்று. அங்கு வெங்காயம் என்ன விலைக்கு ஆன் லைனில் விற்கப்படுகிறது தெரியுமா?

1 கிலோ இந்திய வெங்காய விலை பங்களாதேஷ் டாக்கா 28 அல்லது இந்திய ரூபாய் 23.  

சிக்காகோ நகரில் 1கிலோ வெங்காயம் 46 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நிலையாகும்.

இந்த விலைக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதால் யாருக்கு லாபம்?.

எனவே, வெளிநாடுகளில் வெங்காயத்தை இறக்குமதி செய்யும்பொழுது கொட்டிக் கொடுக்கிறார்கள் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. 1 குவிண்டால் ஏற்றுமதி விலை ரூ. 6.000த்தைத் தாண்டினால் வெளிநாட்டு வியாபாரி சீனா, எகிப்து, ஏமன் நாட்டு வியாபாரிகள் பக்கம் திரும்பி விடுவார்கள். இந்தியா பக்கம் திரும்பவேமாட்டார்.

1 கிலோ 23 முதல் 46 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யத்தான் அனுமதி வேண்டும் என்று விவசாயிகள் குரல் கொடுக்கிறார்கள்.

இந்திய விவசாயிகளின் அவல நிலையை இந்த கணக்கிற்கு பிறகாவது மத்திய அரசு புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் வெங்காய சந்தை எப்படி இயங்குகிறது. ஏற்றுமதி எப்படி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய கம்பெடிசன் கமிஷன் (INDIAN COMPETITION COMMISSION) ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து அவர்களுக்கு நிதியை தந்து ஆய்வு நடத்த பணித்தது. அந்த குழுவின் ஆய்வுரை மிகவும் பொருத்தமானதாகவும் அடிப்படையானதாகவும் உள்ளது.

முக்கிய பரிந்துரைகள்:

*பெரிய வெங்காய சந்தைகளில் கமிஷன் ஏஜெண்டுகள் வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறார்கள்,

*இவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த புதிய கமிஷன் ஏஜெண்டுகளை அறிமுகம் செய்ய வேண்டும்.

(இந்த புதிய கமிஷன் ஏஜெண்டுகள் மாறமாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தர முடியும்.)

*வெங்காய சந்தைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை பொருத்தமட்டில் மிகவும் மோசம்.

*வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஏற்றுமதியை தடை செய்வதும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிப்பதும், வெங்காய சந்தையை கடுமையாகப் பாதிக்கும்

* இந்திய வெங்காய வியாபாரிகள் மீது வெளிநாட்டு வியாபாரிகள் நம்பிக்கை கொள்வதில்லை, அதனால் எதிர்காலத்தில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விடுகின்றன.

*தேசிய விவசாய மார்க்கெட்டிங் அமைப்புக்கள், வெங்காய விவசாயிகளிடமிருந்து நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இது எந்த அளவுக்கு சாத்தியம் ஆனது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் )

இந்தியாவில் வெங்காய விளைச்சலில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கர்நாடக மாநிலம்.

இந்த 2 மாநிலங்களிலும் விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புக்கள் வலுவான இயக்கமாக ஏற்கனவே உள்ளன.

வெங்காய வர்த்தகத்தில்  இந்த கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம்.  

இந்த கூட்டுறவு அமைப்புகளை சுய உதவிப் பெண்கள் குழுக்களின் கையில் ஒப்படைத்தால் அவர்கள் இந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். வெங்காய விவசாயிகளின் வீட்டு பெண்கள் மார்க்கெட்டிங் பணியை ஏற்றுக் கொண்டால் அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.

 தேவையான தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசும் மாநில அரசும் வழங்கலாம்

மொத்த உற்பத்தியை ஏற்றுமதிக்கு, உள்நாட்டு விறபனைக்கு என 2 தொகுதிகளாகப் பிரித்து லாபகரமாகச் செயல்பட முடியும்.

இப்படி ஒரு நிரந்தரமான விற்பனை அமைப்பை விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் மேற்கொள்ளும் பொழுது, அந்த அமைப்பின் பலனாக கிடைக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் ஊழலுக்கு இடம் அற்றதாக அமையும் என்று நம்பலாம்.

உற்பத்தித் திறன்

இந்தியாவில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு பகுதி வெங்காய உற்பத்தி திறன்.

 நம்மை விட குறைவான நிலத்தில் சீனா நம்மை விட அதிகமான அளவு வெங்காயத்தை உற்பத்தி செய்யமுடிகிறது .

கூடுதல் உற்பத்திக்கு  என்ன தேவை என்பதில் நம்முடைய விவசாய தொழில்நுட்ப நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மொத்த உற்பத்தியை ஆர்கானிக் உற்பத்தியாக மற்றினால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

வெங்காய விலை உயர்வு மற்றும் அதன் தொடர் பாதிப்புகள் மகாராஷ்டிர தேர்தலில் பெரும் பாதிப்புக்களை உருவாக்கினால் கூட அரசு அதுபற்றிக் கவலைப்படாமல் தேர்தலை முன்னிறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விவசாயிகள் நலன், இந்திய விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை, சர்வதேச சந்தையில் விற்க இருப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் என சிந்திக்க வேண்டும்.

 அதன் மூலம் இந்திய விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு உதவலாம்.

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சனையை அணுகுவது விவசாயிகள் நலனுக்கும் வர்த்தக நலனுக்கும் சிறப்பாக அமையும்


கட்டுரையாளர்: க.சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation