திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் 6ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள் : 05 அக்டோபர் 2019 13:37

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமன் தங்க வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகத்துடன் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் வீதிஉலா வந்தார்.

இன்று காலை ராமருக்கு சேவை செய்த பக்தனான அனுமனின் சேவையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் மலையப்பசுவாமி, அனுமன் வாகனத்தில், ராமர் அலங்காரத்தில் 4 மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகள் தோறும் திரளான பக்தர்கள் காத்திருந்து உற்சவரை வழிபட்டனர்.

ஏராளமான பக்தர்கள் கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஆடியபடியும், சுவாமி அவதாரங்கள் போல் வேடமிட்டு நடனமாடியும் வீதி உலாவில் பங்கேற்றனர்.

மாட வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை, 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தயார்களுடன் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாடவீதியில் வலம் வரும் வைபவம் நடைபெற உள்ளது.