இந்தியா சேவைத்துறையில் செப்டம்பர் மாதம் கடும் வீழ்ச்சி

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019 21:03

புதுடில்லி,

இந்தியாவின் சேவைத்துறை கடந்த செப்டம்பர் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறைந்து வரும் தேவைகள், சவலான சந்தை நிலவரம் ஆகியவற்றால் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின் சேவைத்துறைக்கான குறியீட்டு எண் சரிந்துள்ளது.

ஐ.எச்.எஸ் மார்கிட் இந்திய சர்வீஸ் நடத்திய ஆய்வில் கடந்த செப்டம்பர் மாதம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சேவைத்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பி.எம்.ஐ என்றழைக்கப்படும் (PMI) பர்சேசிங் மானெஜர் இண்டக்ஸ் (Purchasing Managers' Index) என்ற குறியீட்டு எண் 50க்கும் அதிகமாக இருந்தால் விரிவாக்கத்தை குறிக்கும். 50 குறைவான புள்ளிகள் சரிவை குறிக்கும்.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான பி.எம்.ஐ குறியீடு எண் 48.7 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது 52.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைகள் குறைந்திருப்பது, போட்டியாளர்கள் இடையே நியாயமற்ற விலை நிர்ணயம், பொருளாதார பிரச்சனைகள் ஆகியவை சேவைத்துறையை பாதித்துள்ளது.

இந்த ஆய்வின்படி இந்தியாவின் தனியார் துறையின் வளர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் தடைப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.எச்.எஸ் மார்கிட் நிறுவனத்தின் பிரதான பொருளாதார நிபுணர் போலியானா டி லிமா கூறுகையில் :

இந்தியாவின் தனியார் துறையின் வளர்ச்சி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின் முதல்முறையாக சரிவை சந்தித்துள்ளது. இது விற்பனை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவை பிரதிபலிக்கிறது.

மொத்த உள்ளீட்டு செலவு பணவீக்கத்தின் வீழ்ச்சி மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இது வட்டி விகிதத்தில் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது.

ஆகஸ்ட் மாதத்தை விட ஏற்றுமதி செப்டம்பர் சற்று வேகமாக வளர்ந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் மிக மெதுவான வேகத்தில் இருந்தாலும், நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது என போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.