தலைமை ஆசிரியர்!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை, வக்கணம்பட்டி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1996ல், 5ம் வகுப்பு படித்தேன்.

தலைமையாசிரியராக, சந்தானகிருஷ்ணன் இருந்தார். மாணவர்களை, மிகவும் பொறுப்புடன் கவனித்து நெறிப்படுத்துவார். என் அம்மா, 1981ல், 8ம் வகுப்பு படித்த போது, அவரே ஆசிரியராக இருந்ததால், என்னை கனிவுடன் விசாரித்து, அறிவுரை கூறுவார்.

என் மகனை, 1ம் வகுப்பில் சேர்க்க, அதே ஊரிலுள்ள தனியார் பள்ளிக்கு, 2017ல் அம்மாவுடன் சென்றேன். பள்ளி வளாகத்தில், முதன்மை கல்வி ஆலோசகர் என்ற அறிவிப்பு பலகை இருந்தது. விசாரித்த போது, சந்தானகிருஷ்ணனே ஆலோசகராக இருப்பதை அறிந்து மகிழ்ந்தோம்.

வியப்பும், ஆர்வமும் மேலிட, அவரை சந்தித்து, விவரத்தை கூறினேன். மிகவும் மகிழ்ச்சியுடன், என் மகன் விரல்களைப் பிடித்து, 'அ' என, அரிசியில் எழுதி, கல்விக்கு அட்சரம் போட்டார்.

என் வயது, 32; குடும்பத்தில், மூன்று தலைமுறைக்கு, ஆசிரியராக விளங்கும் அந்த ஆசானின், பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றோம்.

–- நா.கோகிலன், வேலுார்.