பெருகும் கண்ணீர்!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

வேலுார் மாவட்டம், அரக்கோணம், துாய அந்திரேயர் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 11ம் வகுப்பு படித்த போது, ஆசிரியராக, சார்லஸ் இருந்தார். மிகுந்த மனித நேயமிக்கவர்.

மாலையில், அவரது வீட்டில் சிறப்பு வகுப்பு நடத்துவார்; கூடுதல் கவனம் செலுத்தி கற்பிப்பார்.

தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்த போது, இறுதி ஊர்வலம் பற்றிய நேரடி வர்ணனை, வானொலியில் ஒலி பரப்பாகிக்கொண்டிருந்தது.

சிறப்பு வகுப்புக்கு சென்ற போது, சார்லஸ் ஐயா கண்ணீர் வழிந்தோட, வானொலி பெட்டி அருகே தேம்பி அழுதுகொண்டிருந்தார். வியப்புடன் அதை கவனித்தேன்.

படிப்பை முடித்து, ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த போது, பெருந்தலைவர் காமராஜர் காலமானார். அந்த தகவலை கேட்டவுடன், என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தலைவர்களின் மறைவு, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அன்று தான் உணர்ந்தேன்.

என் வயது, 68; அரசு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். நல் அறிவுடன், கல்வி புகட்டிய அந்த ஆசிரியரை வணங்கி மகிழ்கிறேன்.

–- கோவி. ராதாகிருஷ்ணன், வேலுார்.