சந்திப்போமா...!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

ஏழ்மையான குடும்பத்தில், 11 குழந்தைகளுடன் பிறந்தேன். மீன் வியாபாரத்தில் சேர்த்த பணத்தை செலுத்தி, துாத்துக்குடி, ரோசம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார் என் அம்மா.

கடந்த, 1989ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு எழுத ஒரு விடைத்தாள் விலை, 50 காசு; இதை, வாங்க பெரும்பாடு படுவேன்.

தமிழ், ஆங்கில பாட தேர்வுக்கு, தலா, இரண்டு தாள்கள் இருந்தன. அவற்றுக்கு, கூடுதலாக, 1 ரூபாய் தேவைப்படும்; இந்த பணத்தை தர மறுத்து விட்டார் அம்மா; கடுமையாக போராடியும் வாங்க முடியவில்லை.

இதை, வகுப்பாசிரியர் நாராயணராஜிடம் சொல்லி அழுதேன். அத்துடன், 'தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, தலா இரண்டு தாள்களாக உள்ள தேர்வை, ஒன்றாக மாற்ற, அரசுக்கு கடிதம் போடுங்க ஐயா...' என்று கதறினேன்.

இதைக்கேட்டு, ஓய்வறையில், அவருடன் இருந்த ஆசிரியர்கள் சிரித்தனர்; பின், என் வறுமை நிலையை அறிந்து தேற்றினர்.

என் குடும்ப நிலையைக் கேட்டறிந்த வகுப்பாசிரியர், சீருடை, கல்விக் கட்டணம் என, அனைத்து படிப்பு தேவைகளையும், 12ம் வகுப்பு வரை பூர்த்தி செய்தார்.

தற்போது என் வயது, 44; பல சிரமங்களுடன் உயர்கல்வியை முடித்து, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். என்னை வாழ வைத்த தெய்வமாக, அந்த ஆசிரியரை கருதுகிறேன்.

பணி ஓய்வு பெற்றுள்ள அவரது வசிப்பிடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். சிறுவர்மலர் இதழ் மூலம், அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

–- மு.நாகூர், துாத்துக்குடி.