காட்டில் போட்டி!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

மிருகங்கள் எல்லாம், காட்டில் பொங்கல் விழாக் கொண்டாட முடிவு செய்தன. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, பாயசம் என, உணவுவகைகள் தயாராயின.

விருந்துக்கு முன், விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்று, பரிசு வாங்க முயன்றது ஆமை.

ஓட்டப் பந்தயத்தில், புள்ளிமான் வென்றதாக அறிவித்தது நடுவர் நரி.

'இப்போ தான் துவங்கியது... அதற்குள்ளாகவா ஓட்டப்பந்தயம் முடிந்தது' என்றபடி ஆமை, அதிர்ச்சியுடன் பார்க்க, 'கலகல' என, நகைத்தன கூடியிருந்த மிருகங்கள்.

மிகவும் கேலியாக, 'ஆமையாரே... பழைய நினைப்போ உமக்கு...' என்று கூத்தாடியது முயல். ஒரு காலத்தில், ஓட்டப் பந்தயத்தில் தன்னை வென்ற ஆமைக்கு, தக்க பாடம் புகட்டும் ஆத்திரத்தில் இருந்தது.

'அடுத்து குதிக்கும் போட்டி...' என்ற அறிவிப்பை கேட்டு, அதிலும் கலந்து கொண்டது ஆமை. முன்னங்கால்களை ஊன்றி, தாவ முயன்ற போது, 'கிர்' என்று ஒரு சுற்று சுற்றியது. அடுத்த வினாடி, குட்டிக் கரணம் போட்டு, நிலைக்கு வந்தது.

'குதிப்பதிலும் முயல் தான் முதல் பரிசு...' என்றது நரி.

ஆமையைச் சூழ்ந்த மிருகங்கள், அதன் தோல்வியை கேலி செய்து, கும்மாளமிட்டன.

'நான் நிதானமாக நடப்பதால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாதா...' என, பரிதாமாக கேட்டது ஆமை. கேட்டு முடிப்பதற்குள் அடுத்த போட்டியை அறிவித்தது நரி.

'ஒளிந்து கொள்ளும் போட்டி இது... கண்களை மூடி, ௧௦ வரை எண்ணுவேன். அதற்குள் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள். பின் கண்டுபிடிக்க வருவேன்; நான் கடைசியாக கண்டுபிடிப்பவரே, வெற்றி பெற்றவர்...' என்றது நரி.

ஓட்டப்பந்தயம், நீளம் குதித்தல், நீச்சல் என, தோல்வியால் துவண்டு போயிருந்த ஆமை, 'நான் இந்த பாறைக்கு அருகில் ஒளிஞ்சுக்கிறேன்...' என, நகர்ந்தது.

அதன் துருதிர்ஷ்டம்... மரத்தின் வேர் தடுக்கி, மல்லாந்து விழுந்தது ஆமை. நல்லவேளை, கேலி செய்ய அருகில் யாரும் இல்லை; எல்லாரும் ஒளிந்து கொள்ள போய் விட்டனர்.

வழக்கமாக உதவிக்கு வரும் ஆந்தையும் இல்லை. முயன்று நிமிரப் பார்த்தது ஆமை; சுற்றி சுழன்றதே தவிர, நிமிரவே முடியவில்லை. பலமுறை சுழன்றதால் களைத்து, தலை, கால்களுடன், வாலையும் ஓட்டுக்குள் இழுத்தபடி அசையாமல் கிடந்தது. அது பாறைத் துண்டு போல இருந்தது.

சற்றைக் கெல்லாம், 'அதோ முயல்... இதோ மான்.... அதோ ஆந்தை...' என, ஒளிந்திருந்தவற்றை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் குதுாகலித்தது நரி.

'ஆமாம்... ஆமையை எங்கே காணோம்...' என, எல்லா மிருகங்களும் தேடின. கண்டுபிடிக்கவே முடியவில்லை. வேறுவழியின்றி, 'ஆமையாரே... நீர் தான் வெற்றி பெற்றீர்... மறைவிடத்திலிருந்து, வெளியே வாரும்...' என்றது நரி.

அது காதில் விழுந்தும், ஆமையால் நிமிர முடியவில்லை; ஆமையின் அசைவை பார்த்த முயல், 'இதோ, மல்லாந்து கிடக்கிறார் ஆமையார்...' என்று, துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தது.

உடனே, அது நிமிர்ந்த நிலைக்கு வர உதவிய நரி, 'ஒளிந்து கொள்ளும் விளையாட்டு போட்டியில், முதல் பரிசு ஆமையாருக்கே...' என்று பாராட்டியது.

ஆசைப்பட்டது போல் பரிசு வாங்கிய ஆமை மகிழ்ந்தது.

குட்டீஸ்... ஆமை எப்படி முயற்சி செய்து பரிசு பெற்றது பார்த்தீர்களா... அதேபோல, முயற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி உண்டு!