02 அக்டோபர் 2019, 06:01 PM
நடிகர்கள் : அதர்வா, வேதிகா, தன்ஷிகா, ஜெர்ரி, சிவசங்கர், உதய் கார்த்திக், ரித்விகா, மற்றும் பலர். இசை : ஜீ.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : செழியன், எடிட்டிங் : கிஷோர், திரைக்கதை : பாலா, நாஞ்சில் நாடன், தயாரிப்பு, இயக்கம்: பாலா.
சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ராசா (அதர்வா) வெகுளியான இளைஞன். சிறு வயதில் பெற்றோரை இழந்து பாட்டியால் வளர்க்கப்படும் ராசா கிராமத்து மனிதர்கள் அனைவரிடமும் பாசமாக பழகுகிறான். ராசாவை கேலி செய்து விளையாடும் அதே ஊரைச் சேர்ந்த அங்கம்மா (வேதிகா) அவனை விரும்புகிறாள். இருவரும் நெருங்கிப்பழக, ஊரார் முன்னிலையில் அங்கம்மாவின் தாய் பொறுப்பில்லாதவனுக்கு பெண் கொடுக்க முடியாது என்று அறிவிக்கிறார்.
வேலை தேடி பக்கத்து கிராமத்துக்குச் செல்லும் ராசா தேயிலை தோட்டத்து வேலைக்கு ஆள் எடுக்கும் கங்காணியை (ஜெர்ரி) சந்திக்கிறான். ராசாவோடு அவனது ஊருக்கு வரும் கங்காணி பிரிட்டிஷாரின் தோட்டங்களில் வேலை செய்தால் தங்குமிடமும், நிறைய கூலியும் கிடைக்கும் என்று கூறி ஆட்களை சேர்க்கிறான். ஆதரவற்ற தனது பாட்டிக்கு பணம் அனுப்பலாம் என்ற ஆசையில் ராசாவும் ஒப்பந்தத்தில் கைநாட்டு வைத்து, புதிதாக திருமணமான தனது நண்பன் (உதய் கார்த்திக்), அவனது மனைவி (ரித்விகா) மற்றும் பலரோடு சேர்ந்து ஊரை விட்டு கிளம்புகிறான். பாட்டியும், அங்கம்மாவும் வருத்தத்தோடு விடைகொடுக்கிறார்கள்.
தேயிலை தோட்டங்களுக்கு வரும் பயணத்திலேயே உடல்நலம் கெட்டு சிலர் இறக்கின்றனர். பெரும் கனவுகளோடு வரும் மக்களுக்கு அது கங்காணியும் அவனது ஆட்களும் நடத்தும் ஒரு கொடிய சிறை என்று புரிகிறது. தினசரி கூலி அவர்களது உணவுக்கும், தங்குமிடத்துக்கும் செல்கிறது. உடன் பணிபுரியும் மரகதமும் (தன்ஷிகா) அவரது மகளும் ராசாவுக்கு ஆதரவளிக்கிறார்கள். அங்கிருந்து தப்பிய ஒரே மனிதனான மரகதத்தின் கணவனுக்கும் சேர்த்து மரகதம் உழைக்கிறாள். ராசாவுக்கு வரும் கடிதத்தின் மூலம் ராசாவின் குழந்தையை சுமப்பதால் அங்கம்மா விரட்டப்பட்டு தற்சமயம் பாட்டியுடன் இருப்பதாக தெரிய வருகிறது.
ஊர் திரும்பும் நாளுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். விரைவிலேயே அவர்களை கலங்க வைக்கும் வகையில் வெவ்வேறு காரணங்களை கூறி அவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது. தாங்கள் அடிமைகளாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து விரக்தியடைகிறார்கள். உறவுகளை பார்க்கும் ஏக்கத்தில் ராசா தப்பிக்க முயற்சிக்கிறான். கடைசி நேரத்தில் பிடிபடும் ராசாவுக்கு தப்பிக்க நினைத்த மற்றவர்களைப் போலவே காலின் முக்கிய நரம்பு வெட்டப்பட்டு முடமாக்கப்படுகிறான்.
போதிய மருத்துவ வசதி இல்லாமலும், தொற்று நோயினாலும் நிறைய தொழிலாளர்கள் இறக்கிறார்கள். தோட்டத்தை பார்வையிடும் மேலதிகாரியின் உத்தரவால், மெட்ராஸிலிருந்து தமிழ் மருத்துவரும் (சிவசங்கர்) அவரது பிரிட்டிஷ் மனைவியும் சேவை புரிய வருகிறார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை விட, பிரசாரத்தின் மூலம் மதமாற்றம் செய்வதிலேயே மும்முரமாய் இருக்கிறார்கள்.
ஒரு வழியாய் ராசாவின் ஒப்பந்தம் முடிவுக்கு வர, அதை எண்ணி மகிழ முடியாமல் உடல்நலம் குன்றியிருந்த மரகதம் இறந்து போகிறாள். அனாதையாய் நிற்கும் அவளது பெண் குழந்தைக்கு ஆதரவளிக்க அக்குழந்தையின் பெற்றோருக்கு பதிலாக வேலையை தொடர வேண்டிய கட்டாயம் ராசாவுக்கு ஏற்படுகிறது. மலையுச்சியில் அமர்ந்து தனது நிலையை எண்ணி புலம்பி அழும் ராசா புதிதாக வரும் அடிமைக்கூட்டத்தை பார்க்கிறான். அக்கூட்டத்தில் இருக்கும் அங்கம்மாவும் அவனது மகனும் அவனைத் தேடிவர, ”நீங்களும் இந்த நரகக் குழியில் வந்து விழுந்து விட்டீர்களே” என்று கூறி கதறி அழுகிறான். மலையெங்கும் அவனது கதறல் எதிரொலிக்க மனம் கனக்க படம் நிறைவடைகிறது.