சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறை!

பதிவு செய்த நாள் : 01 அக்டோபர் 2019

சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறை!

சரஸ்வதி பூஜையன்று (அக்.7) காலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். சரஸ்வதிக்கு வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும். சரஸ்வதி போற்றி, அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற பாடல்களைப் பாடி தீபாராதனை காண்பிக்க வேண்டும்.

கடலில் கரையும் காளி சிலை!

மகிஷாசுரனை அம்பிகை வெற்றி கொண்ட நாள், விஜயதசமி. இந்நாளில் மேற்கு வங்காளத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி சிலைகளை வழிபடுவர். பூஜை முடிந்ததும் சிலைகளைக் கடலில் கரைத்து விடுவர். அப்போது மீண்டும் அடுத்த ஆண்டு நவராத்திரிக்கு தங்கள் வீட்டுக்கு அம்பிகை எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்வர்.

செம்மறியாட்டுடன் சரஸ்வதி!

புது டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பத்தாம் நுாற்றாண்டை சேர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. மலர்ந்த தாமரையில் அமர்ந்துள்ள இவளின் கைகளில் அட்சமாலை, சுவடிகள் உள்ளன. முத்துமாலை கழுத்தை அலங்கரிக்கிறது. கிரீடம் போன்ற அமைப்பில் தலைமுடி உள்ளது. வட மாநிலங்களில் சரஸ்வதிக்கு அன்னப்பறவை வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு மட்டும் செம்மறி ஆடு அமர்ந்த நிலையில் உள்ளது. சரஸ்வதியின் திருவடியில் வணங்கியபடி பக்தர் ஒருவரும் இருக்கிறார்.

ஆயுத பூஜை என்பது ஏன்?

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அதற்கு உதவியாக இருக்கும் ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வணங்குவதே ஆயுத பூஜை. தொழில் நிறுவனங்களில் உள்ள இயந்திரம் உள்ளிட்ட கருவிகளையும், அன்றாடம் பயன்படும் அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்வர். விஜயதசமியன்று, அவற்றை எடுத்து பணிகள் மேற்கொண்டால் தொழில் வளம் சிறக்கும். ஜடப்பொருளிலும் கடவுளைக் காண்பதே ஆயுத பூஜையின் நோக்கம். குழந்தைகள் ‘அட்சர அப்யாசம்’ எனப்படும் எழுத்துப் பயிற்சியை இந்நாளில் செய்வது சிறப்பு.

அன்னத்தில் அமர்ந்தவள்!

மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் அருகில் திரியம்பக் என்னும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் அன்னத்தின் மீதமர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. அன்னம் வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவையே அணிந்திருக்கிறாள். அதுபோல கல்வியாளர்களும் மாசு மருவின்றி வெள்ளை மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இவளது கோலம் உணர்த்துகிறது. கைகளில் வீணை, ஜபமாலை, சுவடிகள் உள்ளன. அருகில் இரு சேவகர்கள் வெண்சாமரம் வீசியபடி நிற்கின்றனர்.

வாழ்வு தரும் வன்னி இலை!

மகாராஷ்டிராவில் வன்னி மரத்தை விஜயதசமியன்று வழிபட்டு அதன் இலைகளை பறிப்பர். இம்மரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து வணங்குவர். ஆண்டு முழுவதும் வளமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் பெரியவர்கள் அந்த இலைகளை எடுத்து ‘இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி கொடுப்பர்.

வெள்ளை அன்னமே! தோகை மயிலே!!

சரஸ்வதியை அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாக வேதம் போற்றுகிறது. வெண்ணிறம் கொண்ட அன்னம் போல படித்தவர்களும் மாசின்றி வெள்ளை மனதுடன் இருக்க வேண்டும். அவளது வெள்ளைப்புடவையும், ஆசனமான வெண்தாமரையும் இதையே வலியுறுத்துகின்றன.

தென்னகத்தில் சரஸ்வதி மயில் வாகனம் கொண்டவளாக திகழ்கிறாள். ரவிவர்மாவின் ஓவியங்களில் மயில் வாகனமே இடம்பெற்றிருக்கும். தோகையை விரிப்பதும், மடக்குவதுமாக இருக்கும் மயில் போல கல்வியாளர்கள் பரந்த அறிவுடன் இருப்பதோடு பண்பில் அடக்கம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

புராணத்தில் ஒன்பது நாள்!

நவராத்திரியை ஒன்பது நாட்கள் கொண்டாடுவதற்கான காரணம் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மது, கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை அழிக்க விரும்பிய தேவர்கள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்தனர். சீதையை மீட்கச் சென்ற ராமரும் நாரதரின் உபதேசத்தால் அம்பிகையை ஒன்பது நாட்கள் வழிபட்டு ராவணனைத் தோற்கடித்தார். இதனையே ‘நவராத்திரி’ என்னும் பெயரில் கொண்டாடுகிறோம்.