முன்று – மதிஒளி

பதிவு செய்த நாள் : 01 அக்டோபர் 2019


‘‘எப்போதும் அவன் தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்வான்’’ என்று சொல்வார்கள். தனக்கு சாதகமாகவோ, தனக்கு இன்பம் தரக்கூடியதாக இருந்தாலோ இருக்க வேண்டுமென்றோதான் இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.

‘‘இவன் தன்னை பற்றிய ஒரு நினைவுமே இல்லாதவன்’’ என்று சிலரை குறிப்பிடுகிறோம். இவர்கள் என்றும், எப்போதும் பிறர் நினைவிலேயே, அவர்களது நலத்திலேயே அக்கறையுடையவர்களா யிருப்பார்கள். இதுதான் மனித வாழ்க்கையின் பூரணத்துவம். உயர்வெல்லை.

‘‘இப்போது அவன் தன்னுடைய நிழலாகத்தான் இருக்கிறான்’’ என்று சிலரை குறிப்பிடுவதுண்டு. ஆம்! அவனுக்கு தன்னம்பிக்கை போய்விட்டது. பிறர் தயவிலேயே தலைகுனிந்து கொள்ளும் நிலை அவனுக்கு வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தன் நிழலைக் கண்டேதான் பயப்படுகிறான்’’ என்று சொல்வார்கள். நிழல் பயப்படவேண்டியதொன்றல்ல. உருவத்திலிருந்துதான் அது உண்டாகிறது. ஆனால், அது பயமுறுத்துவதாக நினைக்கும் போது நிஜத்தை மறந்து விடுகிறோம். அந்த நிஜத்தை உணர்வதுதான் ‘நான் யார்?’ என்பதை உணர்வது.

நமது அடி ஆழமான உள்ளுணர்விலே இந்த ‘‘தான்’’ என்னும் உணர்வு தளும்பிக் கொண்டு நிற்கிறது. அதுதான் நான் ‘‘அவன்’’ என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஆழத்திற்கு உவமையாக ‘‘ஒருவருடைய அழகு அவர் தோலின் ஆழம்தான்’’ என்று சொல்வார்கள். மற்றொன்று ‘‘அவர் அலட்சியமாக இருந்தாலும், அப்படி இருப்பதுபோல் தோன்றினாலும் அவர் ஆழமாக, அவனை பாராட்டுகிறார்’’ என்று சொல்வார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லோடு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் இவை.

இந்த ஆழமான உள்ளுணர்வுதான் என்றும் அசையாத நல்லுணர்வு. கடமையிலிருந்து உரிமையை பிரிக்க முடியாதது போல், காரணத்திலிருந்து காரியத்தை பிரிக்க முடியாதது போல், ஒற்றுமையிலிருந்து உறுதியை பிரிக்க முடியாதது போல் இந்த நல்லுணர்வை நம்மிடமிருந்து என்றும் பிரிக்க முடியாது.

இந்த அசையாத நிலையை எண்ணிப் பார்த்தால், இது என்றுமே நிலைத்திருக்க வேண்டுமென நாம் எவ்வளவு ஆசைப்படுவோம்! இந்த அசையாத நிலையே பசியாத நிலை, எதிலும் ருசியாத நிலை, எதற்கும் மசியாத நிலை, எதிலும் இசையாத நிலை. இந்த ‘‘தான்’’ என்னும் அசையாத நிலை பெயரையும் வடிவையும் விட மிகவும் நுட்பமாக சிந்திக்க உகந்தது. பெயர் போய்விடும். வடிவம் போய்விடும். ஆனால் தன்னையுணர்ந்த இந்த ‘‘தான்’’ என்னும் நிலை என்றுமே மறையாதது. ஆழத்தினால் அசையாமையை பற்றி நாம் குறிப்பிடும்போது, ‘‘அசையாத தண்ணீர்தான் ஆழத்தில் இருக்கிறது’’ என்பார்கள்.

அசையாத மலையை பார்ப்போம். நாமும் அசையாமலிருக்க சிறிது சிறிதாய் பழகுவோம். ஆச்சரியங்கள் நமக்கு காத்திருக்கின்றன. அதிசயங்கள் நம்மை தேட ஆரம்பித்துவிட்டன. அசையாமலிருக்கும் போதுதான் ஆழம் ெவறும் பார்வையால் அளக்க முடிவதில்லை. வேகமிருக்கும் இடத்தில் விவேகம் குறைந்துவிடும். ஆழமான சிந்தனை செழிப்பதற்கு அடுத்த கணத்தை பற்றிய ஆகாயக் கோட்டைகள் அகல வேண்டும்.

பூரணமான அறிவில் புரிந்துகொள்ள வேண்டியவன் புகழுக்கும் புகழ் சேர்த்தவன். புடை சூழ்ந்த முனிவர்க்கு போதித்த தத்துவங்கள் அவன் கரத்தின் சின்முத்திரையில் தெரிவிக்கப்பட்டவைதான். போற்றுவோம். ஊற்றாக நம் சிந்தனைகளை உள்ளூர மாற்றுவோம்.