கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 199

பதிவு செய்த நாள் : 30 செப்டம்பர் 2019

ஒரு தம்பூரா கலைஞனின் தெம்பான நினைவுகள்...

‘சுருதி மாதா லயப் பிதா’ என்று  சமஸ்­கி­ரு­தத்­தில் ஒரு பழ­மொழி உண்டு. இசை என்­றால் என்ன என்­பதை நான்கே சொற்­க­ளில் தெரி­விக்­கும் வாச­கம் அது. இசை­யில் வெளிப்­ப­டு­கிற நாதத்­தின் ஏற்ற இறக்­கங்­கள் சீராக ஒலிக்க, ஓர் அடிப்­படை சுரம் தேவை. அது தான் சுருதி. அதே போல், சீராக வெளி­வ­ரும் நாதம், ஒரு முறை­யான ஓட்­டம் கொண்­டி­ருப்­பது

அவ­சி­யம். அது­தான் தாளம்... இந்­தத் தாளத்­தைக் குறிக்­கி­றது லயம் என்­கிற சொல். சுருதி என்ற தாயும், லயம் என்ற தந்­தை­யும் இணை­யும் போது சங்­கீ­தம் பிறக்­கி­றது.  

இசைக் கலை­ஞ­னுக்கு மேடை­யில் அடிப்­படை சுரு­தி­யைக் குறிக்க உத­வு­கிற வாத்­தி­யம், தம்­பூரா. இது பார்­வைக்கு வீணை­யைப்­போல் இருக்­கும்...ஆனால் வீணை­யில் உள்ள சுரைக்­காய் வடி­வில் இருக்­கும் பாகம் இதில் இருக்­காது. வீணை­யில் சுரஸ்­தா­னங்­க­ளைப் பிரித்­துக் காட்­டும் மெட்­டுக்­க­ளும் (பிரெட்ஸ்) இருக்­காது.

ஒரு பாட­க­னு­டைய குர­லின் ரேஞ்­சுக்கு ஏற்ப சுருதி கூட்­டப்­பட்ட தம்­பூ­ரா­வின் தந்­தி­களை மீட்­டும் போது, கிண்­ணென்ற நாதம் பாட­க­னின் செவி­க­ளில் நிரம்­பும். அதே போல், பாட­க­னு­டன் வாசிக்­கும்   பக்­க­வாத்­தி­யக்­கா­ரர்­க­ளும் அந்த அடிப்­படை சுரு­தியை உணர்ந்து தங்­க­ளு­டைய வாத்­தி­யங்­களை அதற்­கேற்ப ஒத்­தி­சைப்­பார்­கள். இந்த சுருதி வழங்­கும் அஸ்­தி­வா­ரத்­தி­லி­ருந்து வள­மான இசைத் தொடர்ந்து நடை­போ­டும்.

முன்­பெல்­லாம் இந்­தத் தம்­பூரா இல்­லாத இசை மேடை­களே கிடை­யாது. ஆனால் எல்­லாம் நவீ­ன­ம­யம் ஆகிக்­போன இந்­தக் காலத்­தில், அதற்­கும் ஒரு எந்­தி­ரம் வந்து விட்­டது. பெயர், சுரு­தி­பாக்ஸ்.

கடந்­து­போன காலங்­க­ளில், தம்­பூரா அவ­ரைப் பிடித்­துக் கொண்­டதா, இல்லை அவர் தம்­பூ­ரா­வைப் பிடித்­துக் கொண்­டாரா என்­கிற அள­வுக்கு, அரை நூற்­றாண்­டுக்கு மேல் இந்த வாத்­தி­யத்தை மீட்­டி­ய­வர் கணே­சன். கச்­சேரி மேடை­க­ளில் தம்­பூ­ரா­வும் கையு­மா­கக் காணப்­பட்­ட­தால், ‘தம்­பூரா’ கணே­சன் என்று அறி­யப்­பட்­ட­வர்.

எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி முதல் உன்னி கிருஷ்­ணன் வரை, படே குலாம் அலி முதல் பர்­வீன் சுல்­தானா வரை,  ஆயி­ரம் ஆயி­ரம் சங்­கீத விற்­பன்­னர்­க­ளுக்கு சுருதி மீட்­டிய கணே­சனை அண்­மை­யில் மீண்­டும் கண்­டேன்.  

சங்­கீ­தத்­திற்கு வாக்­கப்­பட்­ட­வர்­போல் கல்­யா­ணம் செய்­து­கொள்­ளா­மலே காலம் கழித்­து­விட்­ட­வர், நோய்­வாய்ப்­பட்­ட­பின் சரி­யான கவ­னிப்­பு­டன் நடத்­தப் பட­வேண்­டும் என்­ப­தற்­காக அவ­ரு­டைய சகோ­த­ரர்­கள் அவரை அதி­கம் பேர் இல்­லாத ஒரு வச­தி­யான முதி­யோர் இல்­லத்­தில் சேர்த்­தி­ருந்­தார்­கள். கணே­சனை நான் காணச் சென்­ற­போது,  அவ­ரு­டைய மூத்த சகோ­த­ரர் எஸ்.வி.எஸ்.மணி என்­னு­டன் வந்­தார்.

ஒரு சூடான காபியை எனக்கு  வர­வ­ழைத்­துக் கொடுத்­து­விட்டு, தன்­னு­டைய நீண்ட அனு­ப­வத்­தி­லி­ருந்து சில திவ­லை­க­ளைத் தெளித்­தார் கணே­சன்.

ஹீரோ நடி­க­ரும் மிகச் சிறந்த பாட­க­ரு­மான கொத்­த­மங்­க­லம் சீனு­தான் கணே­ச­னின் தந்தை.

கன­வுக்­கன்னி என்று டி.ஆர்.ராஜ­கு­மா­ரியை நிலை­நி­றுத்­திய ‘கச்ச தேவ­யானி’ படத்­தில் சீனு­தான் ராஜ­கு­மா­ரி­யின் ஜோடி. இத்­த­கைய பெரும் கலை­ஞ­ரின் நிலை, 1979ல் எப்­படி இருந்­தது என்­பது தம்­பூரா கணே­சன் நினை­வு­கூ­றும் ஒரு சம்­ப­வத்­தி­லி­ருந்து நாம் ஒரு­வாறு அறி­ய­லாம்.

கணே­ச­னின் நினை­வுப்­படி, வக்­கீல் பி.எஸ். ராம­னின் வீட்­டுத்­தி­ரு­ம­ணம்...வித்­வான் டி.கே.கோவிந்­த­ரா­வின் பாட்டு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. அப்­போது முதல்­வ­ராக  இருந்த எம்.ஜி.ஆர் வந்­தி­ருந்­தார்.

கச்­சேரி முடிந்­த­தும், அதில் பங்­கெ­டுத்த கலை­ஞர்­க­ளுக்கு எம்.ஜி.ஆர். மாலை அணி­வித்து கவு­ர­வித்­தார். அப்­போது கணே­சனை கோவிந்­த­ராவ் எம்.ஜி.ஆருக்கு அறி­மு­கம் செய்­து­வைத்­தார். தான் கொத்­த­மங்­க­லம் சீனு­வின் மகன் என்று கணே­சன் எம்.ஜி.ஆரி­டம் தெரி­வித்­தார்.  எம்.ஜி.ஆர், சற்­றுத் தயங்­கி­ய­வாறு, ‘அவர் இறந்­து­விட்­டார் இல்­லையா’, என்­றார். கணே­ச­னுக்­குத் தூக்­கி­வா­ரிப்­போட்­டது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன் மறைந்­து­விட்ட கொத்­த­மங்­க­லம் சுப்­புவை நினைத்து அப்­படி எண்­ணி­விட்­டார் போலும் எம்.ஜி.ஆர். என்று நினைத்து, ‘இல்லை, இல்லை...அப்பா இருக்­கார்’ என்று கணே­சன் உரைக்க, ‘அவர் அப்பா கொத்­த­மங்­க­லம் சீனு நல்­லாவே இருக்­கார்’ என்று எம்.ஜி.ஆரி­டம் டி.கே.கோவிந்த ராவும் கூறி­னார்.

புகழ் இல்­லா­விட்­டால் கலை­ஞன் பிணம்­தான், என்­றொரு எழுத்­தா­ளர் என்­னி­டம் கூறி­யது என நினை­வுக்கு வந்­தது. உண்மை என்ன வென்­றால், பல வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர், தொண்­ணூறு வய­தைத் தாண்­டிய கொத்­த­மங்­க­லம் சீனு, 2001ல் மறைந்­தார்.

எம்.ஜி.ஆர். துணை­வே­டத்­தில் நடிக்க ததிங்­கி­ணத்­தோம் போட்­டுக்­கொண்­டி­ருந்த 1930களின் இடைப்­பட்ட பகு­தி­யில், கொத்­த­மங்­க­லம் சீனு ஒரு திரைப்­பட ஹீரோ. அழ­கி­லும், இசைத்­தி­ற­மை­யி­லும் வியக்­கப்­பட்ட நபர்.

‘‘கோத­ரும் இளம் கோதை­மார்  மையல் கொண்­டி­டும் சிலை மாறன், தரும் கொடைக்கு  மேல் அதி­கா­ரன், திரு கொத்­த­மங்­கல ஊரன்’’ என்று பாட்­டு­டைத் தலை­வ­னாக வைத்து, உடு­மலை நாரா­யண கவி­யால் கொண்­டா­டப்­பட்­ட­வர். ஆனால் 1935ல் தொடங்­கிய சீனு­வின் திரை வாழ்க்கை, 1947ல் அஸ்­மித்­து­விட்­டது.

‘‘நாதப்­பி­ரும்ம வினோ­த­பாக சங்­கீ­தத்­தோர் அபி­மானி, நமது நண்­ப­னா­கிய சீனி’’ என்று நாரா­யண  கவி வியந்து போற்­றிய சீனு, ஸ்பெஷல் நாட­கங்­கள் என்று கூறப்­ப­டு­கிற அந்­நாள் இசை நாட­கங்­க­ளில் நடித்­த­தோடு, மேடைக் கச்­சே­ரி­க­ளும் செய்­தார். ஏனென்­றால்,  திரைப்­ப­டங்­க­ ளுக்­கும் இசை நாட­கங்­க­ளுக்­கும் தேவை­யான பாடல்­கள் பாடி­ய­தோடு நில்­லா­மல், சுத்­த­மான கர்­நா­டக இசை­யி­லும்  அவர் கெட்­டிக்­கா­ர­ராக இருந்­தார். டி.என்.கிருஷ்­ணன், எம்.எஸ்.கோபா­ல­கி­ருஷ்­ணன், திருப்­பாற்­க­டல் வீர­ரா­க­வன் போன்ற தர­மான வய­லின் கலை­ஞர்­கள் அவ­ருக்­குப் பக்­க­வாத்­தி­யம் வாசித்­தார்­கள். திருச்சி ராக­வன், மத­ராஸ் கண்­ணன், மதுரை சீனி­வா­சன் முத­லிய முதல் தர லய வித்­வான்­கள் மிரு­தங்­கம் வாசித்­தார்­கள்.

ஒரு இசை விழா­வில், கொத்­த­மங்­க­லம் சீனு கலந்­து­கொண்டு தோடி ராக ஆலா­பனை செய்து கீர்த்­த­னைப் பாடி­னார். அவ­ருக்கு முன் பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா பாடி­யி­ருந்­தார்.  சீனு பாடிய தோடி­யைக் கேட்டு பால­மு­ரளி வியந்­த­தா­கக்­கூ­றப்­ப­டு­கி­றது. அவ­ரி­டம் சீனு கூறி­னார்...‘‘இது திரு­வா­வ­டு­துறை ராஜ­ரத்­தி­னம் பிள்ளை தந்த கொடை’’.

‘‘ராஜ­ரத்­தி­னம் பிள்ளை என்­றால் எங்­கப்­பா­வுக்கு உசிரு. அவரை ரொம்ப கஷ்­டப்­பட்டு  பிரெண்டு பிடிச்சா...’’, என்­கி­றார் கணே­சன்.  ‘‘நீங்க என்ன கேக்­க­றீங்­களோ அதை வாசிக்­கி­றேன்னு ராஜ­ரத்­தி­னம் பிள்ளை அப்பா கிட்ட சொன்­னார்’’.

சீனுவை போற்­றிய பால­மு­ரளி, சீனு­வின் மக­னான கணே­ச­னை­யும் பாராட்­டி­னார்.  ‘‘கொஞ்­சம்­கூட சுருதி கலை­யாம கச்­சேரி நெடுக சீரா சுருதி மீட்­டி­னாய்’’ என்று மெச்­சி­னார்.

சுருதி என்­பது கச்­சேரி செய்­ப­வர்­க­ளின் காது­க­ளில் மெல்­லென விழ­வேண்­டிய விஷ­யம் என்று புரிந்­து­கொண்டு, தந்­தி­களை அழ­காக நீவி­விட்டு ஒலி­யெ­ழுப்­பி­ய­தால் அவை அமைக்­கப்­பட்ட சுரு­தி­யி­லி­ருந்து கலை­யா­மல் அப்­ப­டியே இருந்­தன.

இப்­ப­டிப் பட்ட நீண்ட நெடிய இசைச் சேவைக்­காக கவு­ர­விக்­கப்­பட்ட கணே­சன்,  இந்த வேலைக்கு எப்­படி வந்­தார்? அதன் பின்­னணி என்ன?

கொத்­த­மங்­க­லம் சீனு நன்­றாக வாழ்ந்­த­வர். சில, அல்­லது பல, தொழில்­முறை சங்­கீ­த­கா­ரர்­க­ளுக்கு இருந்த சின்­னத்­த­னங்­கள் ஏதும் இல்­லா­த­வர். பரந்த விசா­ல­மான மனம் உடை­ய­வர். எல்­லோ­ரை­யும் சரி­ச­ம­மாக மதித்து நடப்­பார். அவ­ரு­டைய மனம் போல் அவ­ருக்­குப் பெரிய குடும்­ப­மும் அமைந்­தது.

ஆனால் பிள்­ளை­கள் வளர்ந்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில் நல்­ல­வர்­க­ளுக்­கும் நல்ல கலை­ஞர்­க­ளுக்­கும் வரும் சோத­னை­க­ளைப்­போல் அவ­ருடை வரு­மா­னம் குறைந்­து­விட்­டது. ‘‘நாங்க ஸ்கூல் படிக்­கும் போது சாப்­பாடு இல்­லாம இருந்­தி­ருக்­கோம். பி.எஸ்.ஹை ஸ்கூல்ல எனக்கு சாப்­பாடு கொடுத்­தி­ருக்கா,’’ என்­கி­றார் கணே­சன்.

மயி­லாப்­பூர் அப்­பர்­சாமி கோயில் தெரு­வில் வாடகை வீட்­டில் இருந்த சீனு, ஒரு நாள் அடுத்த தெரு­வி­லி­ருந்த  காரைக்­குடி சந்­தி­ர­ம­வுளி என்ற மிரு­தங்க வித்­வான் வீட்­டு­டக்கு சீட்­டுக்­கச்­சே­ரிக்­கா­கப் போனார். பல வித்­வான்­கள் குழு­மிய அந்த இடத்­திற்கு தந்­தை­யு­டன் கணே­ச­னும் சென்­றார். பொழு­தைப் போக்க சீட்டு விளை­யா­டிய இடத்­தில், சந்­தி­ர­ம­வு­ளிக்கு ஒரு உருப்­ப­டி­யான யோசனை உதித்­தது. ‘‘டேய் கணேசு...ஏண்டா சும்மா இருக்கெ... தம்­பூரா போடேன்...

காசு வரும்....’’

‘‘எனக்­குத் தம்­பூரா போட்டே பழக்­கம் இல்­லையே,’’ என்று விழித்­தார் கணே­சன். அவர் அப்­போது நிஜார் அணிந்த பையன். ‘‘கஷ்­டம் இல்­லைடா...இப்­ப­டித்­தான்,’’ என்று போட்­டுக்­காண்­பித்­தார் சந்­தி­ர­ம­வுளி. பதி­னாறு வயது பைய­னாக  ஒரு கல்­யா­ணக் கச்­சே­ரிக்கு தம்­பூரா போட்­டு­விட்டு, 1960ல் வீட்­டுக்கு பதி­னைந்து ரூபாய் சம்­பா­தித்­துக்­கொ­டுத்­தார் கணே­சன். ஒரு தம்­பூரா கலை­ஞ­னின் வாழ்க்­கைத் தொடங்­கி­விட்­டது.  வரு­மா­னம் என்ற சுரு­தி­யைத் தம்­பூரா மீட்ட ஆரம்­பித்­து­விட்­டது!

இப்­ப­டித்­தொ­டங்­கிய வாழ்க்­கை­யில், ஒரு நாள் எம்.எஸ்.சுக்­குத் தம்­பூரா போட வேண்­டும் என்ற அழைப்பு வந்­தது. மயி­லை­யில் இருந்த கணே­சன், கீழ்ப்­பாக்­கத்­தில் இருந்த கல்கி கார்­டென்­சுக்கு எப்­ப­டிப் போவது என்று யோசித்­தார்.  இடைப்­பட்ட தூரத்­தில், நுங்­கம்­பாக்­கத்­தில், இருந்த எழுத்­தா­ளர் தேவன் வீட்­டுக்­குச் முதல் நாளே சென்­று­விட்­டார். அப்­பா­வின் நண்­ப­ரான தேவன், அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு அலா­ரம் வைத்து, கணே­சனை எழுப்­பி­விட்டு, ஒரு கப் டிக்ரி காப்பி கொடுக்­கச்­செய்­தார். அரை நிஜார் போட்­டி­ருந்த கணே­ச­னுக்கு எட்டு  முழ வேட்டி கொடுத்து, அதைக் கட்­டிக்­கொண்டு போகச்­செய்­தார்.

சரி­யா­கப் பத்து மணிக்கு, கணே­ச­னும் இன்­னொரு தம்­பூரா கலை­ஞ­ரான  மந்­தை­வெளி வெங்­க­ட­ரா­ம­னும் வந்­து­விட்­டார்­களா என்று கவ­னிக்க சதா­சி­வம் வந்து பார்த்­தார். லட்­சுமி, சரஸ்­வதி என்ற இரு தம்­பூ­ராக்­க­ளு­டன் எச்.எம்.வி. ஒலிப்­ப­தி­வுக் கூடுத்­திற்கு தனித்­தனி கார்­க­ளில் இரு­வ­ரும் அனுப்­பப்­பட்­டார்­கள். அங்கே எம்.எஸ்.சுக்­கான சுரு­தி­யில் தம்­பூ­ராவை சேர்த்­துக் கொண்டு, இரு­வ­ரும் தந்­தி­களை மீட்­டிக் கொண்­டே­யி­ருந்­த­தார்­கள். சுருதி களை­கட்­டி­யது, ஆனால் எம்.எஸ். எப்போ வரு­வார்?

பிறகு, எம்.எஸ்­சும் சதா­சி­வத்­து­டன் வந்­தார். ‘பாவ­யாமி ரகு­ரா­மம்’ என்ற ஸ்வாதித் திரு­நாள் கிருதி அன்று  பதி­வா­னது.  ஒலிப்­ப­திவு செய்­த­வர் எச்.எம்.வி. ரகு.  ‘டேக்’ திருப்­தி­க­ர­மாக வந்­த­வு­டன் அதை மீண்­டும் போட்­டுக்­கேட்­டார்­கள். அனு­பல்­ல­வி­யில் ஒரு இடத்­தில் ஏதோ ஒரு பேச்­சுக்­கு­ரல் கேட்­டது. கவ­னித்­துப் பார்த்­தால், ‘சபாஷ்’ என்ற வார்த்தை அது. அதைப் பேசி­ய­வர், கணே­சன் தான் ! ஒரு குறிப்­பிட்ட இடத்­தில் எம்.எஸ். போட்ட சங்­க­தி­யைக் கேட்டு, தன்­னை­யும் மறந்து ‘சபாஷ்’ போட்­டு­விட்­டார் கணே­சன் !  தானாக வந்­து­விட்­டது என்­பதை சதா­சி­வம்  நம்­பத்­த­யா­ராக இல்­லை­யாம். ஆனால் ஒலிப்­ப­தி­வா­ளர் ரகு தன்­னு­டைய திற­மை­யைக் காட்டி, பதி­வான சபாஷை சுவ­டு­தெ­ரி­யா­மல் நீக்­கி­விட்­டார்! அதற்­கும் இன்று ஒரு சபாஷ் கூறி, ‘ரகு ஒரு ஜீனி­யஸ்’ என்­கி­றார் கணே­சன்.

கணே­ச­னின் வாழ்க்­கை­யில் இம­யத்­தைப் போல் ஓங்கி நிற்­ப­வர் எம்.எல்.வசந்­த­கு­மாரி. முதன் முதல் ஒரு கல்­யா­ணக் கச்­சே­ரி­யில் அவ­ருக்­குத் தம்­பூரா போட்­டார். மீனா சுப்­ர­ம­ணி­யம் என்ற சிஷ்­யை­யின் வீட்­டுத் திரு­ம­ணத்­தில் பாடிய எம்.எல்.வி, இல­வ­ச­மா­கத்­தான் பாடி­னார். பக்க வாத்­தி­யக்­கா­ரர்­க­

ளுக்­குப் பணம் கொடுக்­கப்­பட்­ட­போது, கணே­ச­னுக்­குக் கொடுக்­கப்­பட்­டதை விசா­ரித்து, உடன் மூன்று மடங்கு ரூபாய் கொடுக்­கச் செய்­தார்.

எம்.எல்.வி.யுடன் ஒரு மும்பை

கச்­சே­ரிக்கு கணே­சன் போக­வேண்­டிய தரு­வா­யில், கணே­ச­னின் சகோ­த­ரர் ஒரு­வர் இறந்­து­விட்ட செய்தி வந்­தது. இதைக் கேட்டு கண்­ணீர் வடித்த எம்.எல்.வி, நான் வேறு ஏதா­வது ஏற்­பாடு செய்­து­கொள்­கி­றேன் என்று கூறி­ய­தோடு நிறுத்­த­வில்லை.... காரி­யங்­க­ளுக்கு ஐயா­யி­ரம் ரூபாய் கொடுத்­த­னுப்­பி­னார்.  இது­போல் எத்­த­னையோ நிகழ்ச்­சி­கள். வசந்­த­கு­மாரி உண்­மை­யி­லேயே ஒரு வள்­ளல்!

இசைக்­க­லை­ஞர்­க­ளு­டன் மேடை­யில் அமர்ந்து மிக உன்­ன­த­மான இசை­யைக் கேட்ட நினை­வு­க­ளு­டன், மிக உயர்ந்த மனி­தா­பி­மா­னத்­தோடு வாழ்ந்த இசை மேதை எம்.எல்.வியின் நினை­வு­கள் கணே­ச­னைத் தற்­கா­லத்­தி­லும் தொடர்ந்து நெகி­ழச் செய்­கின்­றன.

ஆயி­ரங்­க­ளைத் தான் அள்­ளிப்­போட்­டுக்­கொண்டு, தம்­பூரா வாசித்­த­வனை நாளை வா என்று தட்­டிக்­க­ழித்து, பிறகு 10+5 ரூபாய்­க­ளைக் கவ­ரில் சீல் செய்­து­கொ­டுத்த ஒரு  பிர­பல பாட­க­ரின் நினைவு ஒரு பக்­கம் வாட்­டி­னா­லும், தனக்­கு­த­விக்­கொண்­டி­ருக்­கும் உன்­னி­கி­ருஷ்­ணன் போன்ற சில உண்­மை­யான ஜென்­டில்­மேன்­க­ளும் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள் என்று சந்­தோ­ஷப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார் கணே­சன். இத்­த­கைய உணர்­வு­களே அவ­ரு­டைய தற்­கா­லத்­தின் தம்­பூரா சுரு­தி­யாக அமைந்­தி­ருக்­கின்­றன.

(தொட­ரும்)