நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: மேலும் 4 மாணவர்கள் கைது

பதிவு செய்த நாள் : 28 செப்டம்பர் 2019 13:32

சென்னை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எம்.பி பி.எஸ் வகுப்பில் சேர்ந்ததாக மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 3 மாணவர்களும், காஞ்சிபுரத்தில் மாணவி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டப்  புகாரில் கைதான முதல் மாணவர் உதித் சூர்யா ஆவார்.  

தன்னை போல மேலும் பலர் இதேபோன்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக மாணவர் உதித் சூர்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.  இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் மேலும் 4 அல்லது 5 மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது  தெரியவந்தது. அவர்களில் ஒரு மாணவி உட்பட 4 பேரை கைது செய்திருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான மாணவர்கள் பெயர்கள்: கிருபா, பிரவீன், ராகுல். மாணவி அபிராமி.

உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே இவர்களை போல் இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைக்கேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.