பகவத் கீதை கட்டாயப் பாடம் ஆக்கப்பட மாட்டாது : சூரப்பா விளக்கம்

பதிவு செய்த நாள் : 26 செப்டம்பர் 2019 12:20

சென்னை,

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பபாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளில் பகவத் கீதை அறிமுகம் செய்யப்பட்டதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆதரித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதில், 

இனி பொறியியல் மாணவர்கள் 3-வது செமஸ்டரில் முக்கிய பாடங்களுடன் சேர்த்து தத்துவவியல் பாடமும் படிக்க வேண்டும். 3 கிரெடிட்டுகள் கொண்ட இந்த கட்டாயப் பாடத்தில் இந்து மத நூல்களாக கருதப்படும் வேதங்கள் மற்றும் பகவத் கீதை குறிப்பு நூல்களாக இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பாடத்திட்டம், அகில இந்திய தொழிற்நுட்ப கல்விக் குழும வழிகாட்டுதலின் படி அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT, CEG, ACT, SAP வளாகங்களில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதலே தத்துவவியல் பாடம் கற்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்குப் பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்தும் ஆசிரியர்கள், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக வலைதளங்களில் பல எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் 

அரசியல் காரணங்களுக்காக மாணவர்கள் மீது எந்த பாடமும் திணிக்கப்படாது; தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடங்களை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு அதிக பாடச்சுமை உள்ளது.

இதோடு கூடுதல் சுமையைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே சமஸ்கிருதம், பகவத் கீதை பாடத்தை விருப்பப்பாடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து மீண்டும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்

எச். ராஜா கருத்து

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

பகவத் கீதையைக் கற்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது.

மார்க்ஸின் புத்திரர்களுக்கும் கால்டுவெல்லின் புத்திரர்களுக்கும் இந்தியா தொடர்பான அனைத்தையும் எதிர்ப்பது வழக்கமாகி விட்டது. தங்களின் கொள்கையில், எல்லை தாண்டிய பகுதிகள் மீது அதிகமான விசுவாசத்தை காட்டுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியையும் கால்டுவெல் பிரிட்டனையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.ராஜாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.