கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 198

பதிவு செய்த நாள் : 23 செப்டம்பர் 2019

ஸ்ரீராம் என்றொரு நடிகர்

பார்­வைக்­குப்  பிர­பல ஹாலி­வுட் நடி­கர் அல் பாசி­னோ­போல் இருந்த தமிழ் நடி­கர் அவர்! இன்­றைய நடி­கர்­க­ளைக் கூற­வேண்­டும் என்­றால், டிரிம்­மான அஜீத் போல் இருப்­பார்.

சிவா­ஜி­யின் நண்­ப­ரா­க­வும் நடிப்­புத் தோழ­ரா­க­வும் இருந்­த­வர், ‘பரா­சக்­தி’­யின் வாயி­லாக   சிவாஜி நட்­சத்­திர அந்­தஸ்து பெறத்­தொ­டங்­கிய மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்பே, ஹீரோ­வாக அறி­மு­கம் ஆகி­விட்­ட­வர்!

அகில இந்­திய நட்­சத்­தி­ர­மாக புகழ்­பெற்­று­விட்ட வைஜெ­யந்­தி­மா­லா­வு­டன் எம்.ஜி.ஆர். ‘பாக்­தாத் திரு­ட’­னில் நடிப்­ப­தற்கு ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்பே, ‘மர்ம வீரன்’ என்ற படத்­தில் வைஜெ­யந்­தி­மா­லா­வு­டன் இணைந்து நடித்­த­வர்!

இப்­ப­டி­யெல்­லாம் 1950களில் தமிழ் சினி­மா­வில் வலம் வந்த ஸ்ரீராம் என்­றொரு முன்­னணி நடி­கர், இன்று ஏறக்­கு­றைய முற்­றி­லு­மாக மறக்­கப்­பட்­டு­விட்­டார்!

அலை அலை­யா­கக் காலத்­தின் அத்­தி­யா­யங்­கள் உருண்டு செல்­லும் போது, வான­ளாவ மக்­கள் மன­தில் உயர்ந்து நின்ற ஆகி­ரு­தி­க­ளும் மக்­க­ளின் நினைவு மண்­ட­லங்­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டு­வி­டு­கின்­ற­போது, ஓர­ள­வுக்கே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வர்­கள் மறக்­கப்­ப­டு­வ­தில் ஆச்­ச­ரி­யம் ஒன்­றும் இல்லை. ஆனால் ஸ்ரீரா­மின் கதை­யும் ஒன்­றும் சுவா­ரஸ்ய மற்­றது இல்லை !

ஸ்ரீராம் அறி­மு­க­மா­னது ஜெமி­னி­யின் மறக்க முடி­யாத வெற்­றிப்­ப­ட­மான ‘சந்­தி­ர­லே­கா’­வில். அப்­ப­டி­யி­ருந்­தா­லும் அந்த சிரஞ்­சீ­விப்­ப­டத்­தில் வில்­லன் சசாங்­க­னின் மெய்க்­காப்­பா­ள­னாக அவர் வரு­வ­தும் தெரி­யாது போவ­தும் தெரி­யாது என்­கிற அள­வில்­தான் அவ­ரு­டைய ‘வேடம்’ இருந்­தது.  ஆனால் அந்த வகை­யில் அவர் அரி­தா­ரம் பூசி சிப்­பாய் உடை­களை அணிந்­ததே பெரிய விஷ­யம். ஏனென்­றால் அவர் ஜெமினி ஸ்தாப­னத்­திற்­குள் நுழைந்­தது நடி­க­ராக அல்ல, ‘புளோர் அசிஸ்­டன்ட்’ என்று கூறப்­ப­டு­கிற ஷூட்­டிங் தள உத­வி­யா­ள­ரா­கத்­தான். ஸ்டூடி­யோ­ வில் இந்த வகை­யில் ஓடி­யாடி வேலை செய்­து­கொண்­டி­ருப்­ப­வன் வாட்­ட­சாட்­ட­மா­க­வும் பார்க்க அழ­கா­க­வும் இருக்­கி­றானே என்ற எண்­ணம் வந்து  எவ்­வ­ளவு சிறிய வேடம் என்­றா­லும் கேம­ரா­வுக்கு முன் நிற்க வைத்­துப் படத்­தில் இடம் கொடுத்­ததே பெரிய விஷ­யம். எடுத்த எடுப்­பிலே நல்ல வேடம் கொடுக்­க­வில்­லையே என்று ஆதங்­கப்­ப­ட­மு­டி­யுமா?

ஆனால், ‘சந்­தி­ர­லே­கா’­வில் கண் சிமிட்­டும் முன் மறைந்­து­வி­டு­கிற வேடத்­தில் நடித்த பிறகு, அடுத்­த­தாக ஸ்ரீரா­முக்கு வேறு கம்­பெ­னி­யில் ஹீரோ வேடமே கிடைத்து விட்­டது!

ரஜினி என்ற அழ­கி­யு­டன், இயக்­கு­நர் கே.வேம்­பு­வால் ‘மத­ன­மா­லா’­வில் ஸ்ரீராம் ஜோடி சேர்க்­கப்­பட்­டார்.   ஸ்ரீராம் திறம்­பட நடித்­துள்­ளார் என்று ஒரு திரை இதழ்   தட்­டிக்­கொ­டுத்­தது. இந்­தப் படத்­தில், கத்­திச் சண்டை விஷ­யத்­தில் எம்.ஜி.ஆரே வியந்த பழம்­பெ­ரும் நடி­கர் எம்.வி.மணி­யு­டன் வாட்­சண்­டை­யில் ஸ்ரீராம் மோதி­னார். மயிர்க்­கூச்­செ­றி­யும் கத்­திச்­சண்­டைக் காட்­சி­கள் படத்­தில் இடம்­பெற்­ற­தாக அன்­றைய பத்­தி­ரி­கை­கள் பேசின.

 கண­வர் நாக­பூ­ஷ­ணத்­து­டன் இணைந்து, நடிகை கண்­ணாம்பா  நடத்­திய தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ராஜ­ரா­ஜேஸ்­வரி பிலிம்ஸ் எடுத்த ‘நவ­ஜீ­வ­னம்’ (1949) என்ற படத்­தில், வய­தான ஜோடி கண்­ணாம்பா-, நாகையா. இளம் ஜோடி­யாக எஸ்.வர­லட்­சுமி- ஸ்ரீராம்.

இந்­தப் படம் அது வரு­வ­தற்கு இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் ஏ.வி.எம்.எடுத்த ‘நாம் இரு­வர்’ (1947) படத்­தின் கதையை ஓர­ளவு ஒத்­தி­ருந்­தது.  ‘நாம் இரு­வ’­ரில் காந்­திய வழி­யில் செல்­லும் அண்­ணனை மதிக்­கா­மல் தவ­றான பாதை­யில் சென்­ற­பின் மீள்­கி­றான் தம்பி (டி.ஆர்.மகா­லிங்­கம்). ‘நவ­ஜீ­வ­ன’த்­தில், பணக்­கா­ரியை மணந்­த­தால் வந்த செல்­வத்­தின் மிதப்­பில் தன்னை ஆளாக்­கிய அண்­ணனை அலட்­சி­யப்­ப­டுத்­தும் தம்­பி­யாக ஸ்ரீராம்

நடித்­தார்.

அண்­ணன்-, தம்பி உற­வைத் தவிர, முத­லாளி, -தொழி­லாளி உற­வை­யும் ஒரு அம்­ச­மா­கக் கொண்­டி­ருந்­தது ‘நவ­ஜீ­வ­னம்’. முத­லாளி, தொழி­லா­ளியை மதிக்க வேண்­டும் என்ற கருத்தை முன் வைத்­தது படம். ‘‘ஸ்ரீரா­மின் நடிப்பு இந்­தப் படத்­தில் முதல் படத்­தை­விட பண்­பட்­டி­ருக்­கி­றது. சமூ­கப்­ப­டங்­க­ளில் அவர் மேலும் சோபிக்­கக்­கூ­டும் என்று தெரி­கி­றது....’’ என்று ஸ்ரீராம் பாராட்­டப்­பட்­டார். அன்­றைய சென்னை மாகாண சர்க்­கா­ரால், ஆண்­டின் சிறந்த பட­மாக ‘நவ­ஜீ­வ­னம்’ தேர்வு பெற்­றது.

ஒரு சில தனித்­த­யா­ரிப்­பா­ளர்­கள் படங்­கள் எடுத்­துக் கொண்­டி­ருந்­தா­லும், ஸ்டூடி­யோக்­க­ளின் ஆதிக்­கம் வலு­வாக இருந்த 1950களில் தொடக்க ஆண்­டு­கள் அவை. ஆகவே, ஜெமினி ஸ்டூடி­யோ­வி­லி­ருந்து மீண்­டும் அழைப்பு வந்­த­போது ஸ்ரீராம் மகிழ்ந்­து­போ­னார். சக்­கைப்­போடு போட்­டி­ருந்த தெலுங்கு ‘சம்­சா­ரம்’ படத்தை எஸ்.எஸ். வாசன் தமி­ழில் எடுத்து வெற்றி காண நினைத்­தார். அவர் நினைத்­த­ப­டியே தமிழ் ‘சம்­சா­ர’­மும் சில்­ல­ரையை அள்­ளிக்­கு­வித்­தது. ‘சம்­சா­ரம், சம்­சா­ரம் சகல தர்ம சாரம்’ என்று பின்­ன­ணிப்­பா­ட­ராக ஏ.எம்.ராஜா அறி­மு­க­மான படத்­தில், ஸ்ரீரா­மின் வேட­மும் அமோ­க­மாக அமைந்­தது.

படத்­தின் பிர­தான ஜோடி­யான எம்.கே.ராதா­வும், புஷ்­ப­வல்­லி­யும் சோகச்­சித்­தி­ரங்­க­ளாக இருப்­பார்­கள். இதற்கு மாறு­பட்ட விதத்­தில், வீரி­ய­மான கிரா­மத்து வாலி­ப­னின் முறுக்­கோ­டும் முனைப்­போ­டும் திக­ழும் பாத்­தி­ரம் ஸ்ரீரா­முக்கு. படத்­தில் அவ­ருக்கு ஜோடி, ‘ஜெமினி’ வனஜா. ‘ஆத்­தோ­ரம் நடந்­து­போ­கும் அன்­ன­ந­டைக்­காரி’ என்ற நாட்­டுப்­பு­றப் பாட­லுக்கு  ஸ்ரீராம் அரு­மை­யாக நடித்­தார்.

‘சம்­சா­ரம்’ படத்­தில் ஸ்ரீரா­முக்கு நல்ல பெயர் கிடைத்­தது. இதைத்­தொ­டர்ந்து, ஜெமினி வெளி­யிட்ட ‘மூன்று பிள்­ளை­கள்’ படத்­தில் ஸ்ரீராம்­தான் கடை­சிப்­பிள்ளை. மீண்­டும் அவ­ருக்கு ஜோடி, ‘ஜெமினி’ வனஜா. ஆனால் படம் வெற்­றி­பெ­ற­வில்லை என்­ப­தோடு, ஸ்ரீராம் ஏற்ற பாத்­தி­ர­மும் சோபிக்­க­வில்லை. ‘‘மூன்­றா­வது பிள்ளை, மகள் ஆகி­ய­வர்­க­ளின் பாத்­தி­ரங்­கள் சரி­யா­ன­படி சித்­த­ரிக்­கப்­ப­ட­ வில்லை. இவர்­க­ளின் பாகங்­கள் படத்­தி­லி­ருந்து வெட்­டப்­பட்­டால்­கூட கதை பூர­ண­மா­கவே இருக்­கும்,’’ என்­றது அந்­நா­ளைய முதன்மை திரைப்­பத்­தி­ரி­கை­ யான குண்­டூசி. ஒரு கதை இலா­காவே ஜெமி­னிக்கு வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது ஒரு சினிமா கதைக்கு

இந்த நிலை!

சென்­னை­யில் இப்­ப­டி­யா­னா­லும், கோவை­யி­லி­ருந்து ஸ்ரீரா­முக்கு  அழைப்பு வந்­தது. பட்­சி­ராஜா ஸ்டூடி­யோ­வின் அதி­பர் ஸ்ரீரா­முலு நாயுடு ஸ்ரீராமை அழைத்­தார்.

ஒரு பிர­பல ஆங்­கி­லப்­பத்­தி­ரி­கை­யில் ஸ்ரீரா­மைக் குறித்து சில வரி­கள் எழு­திய ஒரு சினிமா சரித்­திர ஆய்­வா­ளர், ஸ்ரீரா­மின் பெய­ரும் ஸ்ரீரா­முலு நாயு­டு­தான், அதை அவர் ஸ்ரீராம் என்று சுருக்­கி­வைத்­துக்

­கொண்­டார் என்று எழு­தி­னார். தன் பெயரை ஸ்ரீராம் சுருக்­கிக்­கொண்­டார் என்­பது உண்­மை­தான். அவர் நாயுடு வகுப்­பைச் சேர்ந்­த­வர் என்­ப­தும் உண்­மை­தான். ஆனால் அவ­ரு­டைய பெயர் ஸ்ரீரா­முலு அல்ல...

பட்­டா­பி­ரா­மன்!

இண்­டர்­மீ­டி­யட் படிப்­பின் இரண்­டாம் வரு­ஷத்­தில் ஸ்ரீராம் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது, இரண்­டாம் உல­கப்­போர் வெடித்­தது. வீட்­டின் பொரு­ளா­தா­ர­மும் நெருக்­க­டி­யில் இருந்­த­தால், முத­லில் கப்­பற்­படை, அடுத்து தரைப்­படை, அதன் பிறகு ஏ.ஆர்.பி. என்ற யுத்­தப் பாது­காப்­புப் படை என்று ஸ்ரீராம் வேலை செய்­தார். கடை­சி­யில் ஜெமினி ஸ்டூடி­யோ­வில் சிப்­பந்­தி­யா­கச் சேர்த்­தது, திரை உல­கின் வாசல்­களை அவ­ருக்­குத் திறந்­து­விட்­டது.

பட்­சி­ரா­ஜா­வின் ‘பொன்­னி’­யில் ஸ்ரீரா­முக்கு அரு­மை­யான வேடம். பகட்­டான பணக்­கா­ரப்­பெண்­ணாக வரும் பத்­மி­னிக்­குக் காதல் வலை­வீ­சும் நாக­ரிக ஏமாற்­றுக்­கா­ரன் வேடம். இதை ஸ்ரீராம் அற்­பு­த­மா­கச் செய்­தார். அவ­ரு­டைய நடிப்­பைப் ‘பொன்­னி’­யின் ஹைலைட் என்று கூற­லாம்.

பட்­சி­ரா­ஜா­வின் அடுத்த பட­மான ‘மலைக்­கள்­ள’­னில் எம்.ஜி.ஆர்.தான் மலைக்­கள்­ளன். இந்­தப் படத்­தில் எம்.ஜி.ஆருக்கு வில்­ல­னாக வந்­தார் ஸ்ரீராம். எப்­ப­டி­யா­வது கதா­நா­யகி பூங்­கோ­தையை அடைந்­து­வி­ட­வேண்­டும் என்று கங்­க­ணம் கட்­டிக்­கொண்ட சண்­டி­ய­ராக வந்து கடை­சி­யில் மலைக்­கள்­ள­னி­ட­மி­ருந்து ‘கும்­மாங்­குத்து’ வாங்­கு­கி­றார் ஸ்ரீராம்.

வளர்ந்­து­வ­ரும் கதா­நா­யக நடி­க­ராக உயர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது இப்­ப­டிப்­பட்ட உதை வாங்­கும் வில்­லன் வேடங்­க­ளில் வரு­வது ஸ்ரீரா­மின் கதா­நா­யக அந்­தஸ்­தை­யும் நட்­சத்­திர ஹோதா­வை­யும் பாதித்­தி­ருக்க வேண்­டும். ஆனால் அவர் என்ன செய்­வார்? வந்த வாய்ப்­பு­களை ஏற்­றுக்­கொண்­டார்...அது­வும் முத­லா­ளி­கள் கட்­ட­ளை­யி­டும் போது அவ­ரால் எப்­ப­டித் தட்ட முடி­யும்! வில்­லத்­த­னங்­கள் செய்­வது ஒரு ஹீரோ நடி­க­ருக்கு நல்­ல­தல்ல என்று ஸ்ரீரா­மும் உணர்ந்து, ஆண்­டு­கள் செல்­லச் செல்ல அத்­த­கைய வேடங்­க­ளைத் தவிர்த்­தார். ஆனால் அறு­ப­து­க­ளில் தலைக்­கு­மேல் வெள்­ளம்­போன பின்பு அவ­ரால் எந்த வேடத்­தை­யும் மறுக்­க­மு­டி­ய­வில்லை.

டி.ஆர்.ராமண்­ணா­வின் முதல் பட­மான ‘வாழப்­பி­றந்­த­வள்’, ஜெமி­னி­யின் ‘ராஜி என் கண்­மணி’, சாவித்­தி­ரி­யின் ஜோடி­யாக ‘குடும்­பம்’, யூ.ஆர். ஜீவ­ரத்­தி­னத்­தின் கண­வர் வெங்­க­ட­சாமி எடுத்த ‘போன மச்­சான் திரும்பி வந்­தான்’, சிவா­ஜி­யு­டன் ‘கோடீஸ்­வ­ரன்’ என்று ஸ்ரீராம் தொடர்ந்து நடித்­துக் கொண்­டி­ருந்­தா­லும், அவ­ருக்­குப் பிர­தான பாத்­தி­ரங்­களோ, நட்­சத்­திர அந்­தஸ்தோ கிடைக்­க­வில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணே­சன் முத­லி­யோர் பிர­தான நட்­சத்­தி­ரங்­க­ளாக  உரு­வா­கிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், நட்­சத்­தி­ரப் பள­ப­ளப்பு இல்­லாத ஹீரோக்­கள் ஜீரோக்­கள் ஆவார்­கள் என்ற நிலைமை உரு­வா­கிக்­கொண்­டி­ருந்­தது. இந்த ஆபத்­தில் ஸ்ரீரா­மும் சிக்­கிக்­கொண்­டார்.

அத­னால் தன்­னு­டைய நண்­பர், மிரா­சு­தார் ஆச்­சாள்­பு­ரம் கோவிந்­த­ரா­ஜ­னு­டன் இணைந்து, இரு­வ­ரும் ரசித்த வைஜெ­யந்­தி­மா­லாவை கதா­நா­யகி ஆக்கி, ‘மர்­ம­வீ­ரன்’ எடுத்­தார் ஸ்ரீராம். வைஜெ­யந்­தி­யு­டன் டூயட் பாடி­னார்.

ஆனால் ‘மதுரை வீரன்’ வந்த கால­கட்­டத்­தில் ‘மர்­ம­வீ­ரன்’ எடு­ப­ட­வில்லை. ஜெமினி கணே­சன், சாவித்­திரி ஜோடிக்கு இடையே வந்த அழ­கான வாலி­ப­ராக ‘மண­மா­லை’­யில் ஸ்ரீராம் தோன்­றி­னார். கடை­சி­யில் நட்­சத்­திர தம்­பதி இணை­யும்­போது, அவர் வில­க­வேண்­டி­ய­வ­ரா­னார்!

கிறிஸ்­தவ பட­மான ‘மக­த­ல­நாட்டு மேரி’­யில், அழகி மக­தல மேரி மீது ஆசைக்­கொள்­ளும் படைத்­த­ள­பதி பிலிப்­பாக ஸ்ரீராம் வந்­தார்.  இரண்­டாம் கதா­நா­ய­கன், அல்­லது இரண்­டாம் நிலை­யில் உள்ள கதா­நா­ய­கன் என்­கிற இடத்­திற்­குக்­கூட நடி­கர்­கள் எஸ்.எஸ்.ஆர்., பாலாஜி, மலை­யா­ளத்­தி­லி­ருந்து பிரேம் நசீர், என்று கடும் போட்­டி­யி­லி­ருந்த கால­கட்­டத்­தில், ‘மாய மனி­தன்’, ‘யானை வளர்ந்த வானம்­பாடி’ முத­லிய படங்­க­ளில் ஸ்ரீரா­முக்கு ஹீரோ வேடம் கிடைக்­கத்­தான் செய்­தது. ‘நீலா­வுக்கு நிறெஞ்ச மன­சு’­வில் நீலா­வாக வரும் பண்­ட­ரி­பா­யின் ஜோடி­யாக ஸ்ரீராம் வரு­கி­றார். ஆனால் இந்­தப் படங்­கள் வெற்றி பெறா­த­தால், ஸ்ரீராம் ஓரங்­கட்­டப்­பட்­டார்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில், வாய்ப்­பு­கள் குறைந்­து­போய்க்­கொண்­டி­ருக்­கிற ஒரு ஹீரோ நடி­கர் செய்­யக்­கூ­டா­ததை ஸ்ரீராம் செய்­தார். சொந்­தப் படம், அது­வும் பெரிய படம், அது­வும் சரித்­திர படம் எடுக்க அவர் கிளம்­பி­னார்! சாண்­டில்­ய­னின் முதல் சரித்­திர நாவ­லான ‘ஜீவ­பூ­மி’யை, சிவாஜி, சரோ­ஜா­தேவி ஜோடி­யு­டன் எடுக்­கப் புறப்­பட்­டார். பாதி கிணறு தாண்­டி­விட்­டார். ஆனால் அதற்­கு­மேல் படம் வள­ர­வும் இல்லை. ஸ்ரீராம் போட்ட பணம் திரும்­ப­வும் இல்லை.

சிவா­ஜி­யு­டன் ‘மரு­த­நாட்டு வீரன்’, ‘பச்சை விளக்கு’, ‘பழநி’ முத­லிய படங்­க­ளில் ஸ்ரீராம் நடித்­தார். ‘இத­யக்­க­ம­ல’த்­தில் கே.ஆர்.விஜ­யா­வின் கொள்­ளைக்­கார காத­ல­னாக வந்­தார். ‘முக­ரா­சி’­யில் எம்.ஜி.ஆரி­டம் உதை வாங்­கும் குண்­ட­ராக வந்­து­போ­னார்.

ஸ்ரீராம் கப்­ப­லைப்­போன்ற பிளை­ம­வுத் கார் வைத்­தி­ருந்­தார்.

சக நடிகை ஜி.வர­லட்­சு­மி­யின் அன்பு பரிசு என்­பார்­கள். ஆனால் அறு­ப­து

­க­ளில் ஸ்ரீரா­முக்கு கப்­பல் நிறைய துன்­பம்­தான் வந்­து­கொண்­டி­ருந்­தது.

இது மூழ்­கு­கிற கப்­பல் என்று

தெரிந்­த­வு­டன் உற­வி­னர்­க­ளும் ஒதுங்­கி­னார்­கள், தெரிந்­த­வர்­க­ளும் பதுங்­கி­னார்­கள். ஒரு நாள், குதி­ரைப் ­பந்­தய மைதா­னத்­தி­லி­ருந்து திரும்­பும் ­போது ஸ்ரீராம் இறந்­து

­போ­னார். தமிழ் சினி­மா­வின்

ஆண­ழக நடி­க­ரின் கதை இவ்­வா­றாக முடிந்­தது.

(தொட­ரும்)