ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீரர் அமித் பங்கால்

பதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2019 20:55

எகடரின்பர்க், (ரஷ்யா) 

  ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடக்கும் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அமித் பங்கால் பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான மணிஷ் கவுசிக் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதுவரை உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு வெண்கல பதக்கத்திற்கு மேல் வாங்கியதில்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

ஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அமித் பாகல் மற்றும் மணிஷ் கவுசிக் இருவரும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டிக்கு இரண்டு இந்தியர்கள் தகுதி பெற்றது இதுவே முதல் முறை.

ஆனால் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மணிஷ் கவுசிக் அரையிறுதியில் கியூபாவை சேர்ந்த ஆண்டி கோமஸ் குரூஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதன் மூலம் மணிஷ் கவுசிக் உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

அதேசமயம் இந்திய வீரர் அமித் பங்கால், கஜகஸ்தான் நாட்டு வீரர் சாகன் பிபோசினோவை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.

நாளை நடக்கும் இறுதி போட்டியில் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் ஜோய்ரோவ்வுடன் மோதுகிறார்.

தங்கப்பதக்கத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அமித் பங்கால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.