17 செப்டம்பர் 2019, 05:52 PM
நடிகர்கள் : சந்தானம், சேது, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவசங்கர், தேவதர்ஷினி மற்றும் பலர்.
இசை : எஸ். தமன், ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம், எடிட்டிங்: ஜி. ராமாராவ், தயாரிப்பு : சந்தானம், ராம. நாராயணன், திரைக்கதை, இயக்கம் : கே.எஸ்.மணிகண்டன்.
கால் கட்டு கலியபெருமாள் (சந்தானம்), பவர் குமார் (சீனிவாசன்), சிவா (சேது) மூவரும் நிலையான வேலையில்லாமல் ஊர் சுற்றும் இளைஞர்கள். குடும்பத்தினரின் வார்த்தைகளை மதிக்காமல் எப்போதும் குடிப்பது, காதலிக்க பெண்களை துரத்துவது என்று வாழ்கிறார்கள். சிவாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக குடிவரும் குடும்பத்தில் உள்ள இளம் பெண் சவும்யாவால் (விசாகா சிங்) நண்பர்களிடையே சண்டை வருகிறது. சவும்யாவின் காதலைப் பெற மூவரும் முயற்சிப்பது எனவும், சவும்யா யாரை விரும்பினாலும் மற்றவர்கள் அந்தக் காதலுக்கு உதவுவது எனவும் முடிவு செய்கிறார்கள்.
சிவா, சவும்யாவின் சித்திக்கு (கோவை சரளா) உதவி செய்து அதன் மூலம் சவும்யாவின் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்கிறான். அது போலவே கலியபெருமாள் சவும்யாவின் சித்தப்பாவிடம் (விடிவி கணேஷ்) பாட்டு கற்றுக்கொள்ளும் சாக்கிலும், பவர் சவும்யாவின் அப்பாவிடம் (சிவசங்கர்) பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் சாக்கிலும் சவும்யாவின் அபிமானத்தை பெற முயற்சி செய்கிறார்கள். சவும்யாவுக்காக அவர்கள் குடும்பம் தரும் தண்டனைகளை தாங்குகிறார்கள். சவும்யாவிடம் தன்னை நல்லவனாகவும் மற்றவர்களை கெட்டவர்களாகவும் காட்டும்படி ஒவ்வொருவரும் நாடகமாடுகிறார்கள். ஒரு நாள் நண்பர்கள் மூவரும் தங்கள் காதலை சவும்யாவிடம் தெரிவிக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் (தேவதர்ஷினி) மூலம் மூவரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் சவும்யா அவரின் அறிவுரைப்படி, இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும் தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.
தங்கள் ஆசை நிறைவேறாத கோபத்தில் கலியபெருமாள் சவும்யாவின் சித்தப்பாவையும், பவர் சவும்யாவின் அப்பாவையும் தாங்கள் பெற்ற தண்டனைகளுக்கும் சேர்த்து அடித்து உதைக்கிறார்கள். படுகாயமடைந்து வரும் தனது அப்பா மற்றும் சித்தப்பாவை பார்த்து அதிர்ச்சியடையும் சவும்யா தனது சித்தியின் நிலையை நினைத்து கவலையடைகிறார். ஆனால் சிவா எப்போதும் போல அவரது சித்திக்கும், தம்பிக்கும் உதவிகள் செய்கிறார். சிவாவின் வற்புறுத்தலால் நண்பர்கள் சவும்யாவிற்காக நடிகர் சிம்புவை (எஸ்.டி.ஆர்.) சந்தித்து பேச, சவும்யா யாரெனத் தெரியாது என்றுக்கூறி திருப்பியனுப்புகிறார். சிம்புவை கடத்த இவர்கள் நியமிக்கும் ’கொலவெறி’ டேவிட் (ஸ்டண்ட் சில்வா) உண்மை தெரிந்து எரிச்சலாகி சவும்யாவையே கடத்தி விடுகிறான். காதலிக்காக சிவாவும், நண்பனுக்காக மற்ற இருவரும் போராடி சவும்யாவை காப்பாற்றுகிறார்கள். தனது காதலில் மாறாமல் இருந்த சிவாவை சவும்யாவும் விரும்ப, நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் துணையுடன் இருவரும் மணமுடிக்கிறார்கள்.