ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 18–9–19

பதிவு செய்த நாள் : 18 செப்டம்பர் 2019

இளையராஜா செய்த புதுமை!

(சென்ற வார தொடர்ச்சி...)

பார­தி­ராஜா இயக்கி இளை­ய­ராஜா இசை­ய­மைத்து பிர­மா­த­மான வெற்­றி­யைக் கண்ட படங்­கள்: அலை­கள் ஓய்­வ­தில்லை (25 வாரங்கள்) மண்­வா­சனை (286 நாட்கள்), வாலி­பமே வா, வா (131 நாட்கள்), புது­மைப்­பெண் (100 நாட்கள்), முதல் மரி­யாதை (130 நாட்கள்), ஒரு கைதி­யின் டைரி (100 நாட்கள்), கட­லோ­ரக் கவி­தை­கள் (100 நாட்கள்).

பார­தி­ராஜா இயக்கி இளை­ய­ராஜா இசை­ய­மைத்து வியா­பார ரீதி­யில் வெற்றி பெறாத நிழல்­கள், கல்­லுக்­குள் ஈரம், காதல் ஓவி­யம், டிக் டிக் டிக் போன்ற படங்­க­ளில் கூட இளை­ய­ரா­ஜா­வின் இசை அற்­பு­த­மாக அமைந்­தி­ருந்­ததை யாரும் மறுக்­க­வில்லை. பார­தி­ராஜா தயா­ரித்த ‘மெல்­லப் பேசுங்­கள்’ என்ற படம் கூட ராஜா­வின் இசை­யால் 100 நாட்கள் ஓடி­யது.

1980ம் ஆண்டு வரை மேற்­கத்­திய இசை­யின் நுணுக்­கங்­க­ளைத் தமி­ழி­சை­யில் புகுத்தி புதுமை செய்து வந்த இளை­ய­ராஜா, ‘ப்ரியா’ (1979) என்ற படத்­தில் ‘போனி எம்’ பாணி­யில் இசை­ய­மைத்த ‘டார்­லிங் டார்­லிங்’ என்ற பாட­லின் மூலம் மிகுந்த புகழ் பெற்­றார்.

மாஸ்­டர் தன்­ரா­ஜி­டம் மேற்­கத்­திய இசை­யை­யும், மிரு­தங்க வித்­து­வான் டி.வி.கிருஷ்­ண­மூர்த்­தி­யி­டம் கர்­நா­டக சங்­கீ­தத்­தை­யும் முறைப்­படி கற்­றுக் கொண்­டார். சமஸ்­கி­ரு­த ­மொ­ழி­யை­யும், ஆங்­கி­லத்­தை­யும் கூடப் பேசக் கற்­றுக் கொண்­டார். சிங்­கப்­பூ­ருக்­குச் சென்­ற­போது எலெக்­ட­ரா­னிக் இசைக்­க­ரு­வி­களை இயக்க கம்ப்­யூட்­டர் பயிற்சி அவ­சி­யம் என்­ப­தைப் புரிந்து கொண்டு அதை­யும் பயின்­றார்.

இளை­ய­ரா­ஜா­வின் இசை­ய­மைப்­பின் சிறப்பே மேற்­கத்­திய இசை­யின் சிறப்­பம்­ச­மான ‘ஹார்­ம­னி’­­­யை­யும், ‘கவுன்­டர் பாயிண்’ட்­டை­யும் கர்­நா­டக இசை­யில் புகுத்தி, நவீன இசைக்­க­ரு­வி­க­ளைத் தேவை­யான அள­வுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­து­தான். இதற்கு முன்­னு­தா­ர­ண­மாக அமைந்­துள்ள படம் ‘ஆறி­லி­ருந்து அறு­பது வரை’(1980) இது இந்­தி­யப்­ப­டங்­க­ளில் அதுவரை உப­யோ­கிக்­கப்­ப­டாத ஒரு புதிய உத்­தி­யா­கும்.

இளை­ய­ராஜா செய்த புதுமை : ‘ப்ரியா’ படத்­திற்கு இசை­ய­மைத்­த­போது இளை­ய­ராஜா இன்­னொரு புது­மை­யைச் செய்­தார். இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக ஸ்டீரியோபோனிக் முறை­யில் ஐந்து பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்­தார். அதைப் பற்றி இளை­ய­ராஜா கூறு­கி­றார்:

‘‘சாதா­ர­ண­மாக எந்த ஒரு மியூ­சிக் டைரக்­ட­ரும் மூன்று டிராக்­கில்­தான் பாடல்­களை ஒலிப்­ப­திவு செய்­வார்­கள். ஒன்று குர­லுக்­கா­க­வும், மற்­றொன்று வாத்­தி­யங்­க­ளுக்­கா­க­வும் மூன்­றா­வது தாளத்­துக்­கா­க­வும் இருக்­கும். இதை ‘மோனோ ரிக்­கார்­டிங்’ என்­பார்­கள். வட இந்­தி­யா­வில் கூட ஸ்டீரியோ ரிக்­கார்­டு­கள் வந்­துள்­ளன. ஆனால், அவை­யெல்­லாம் மோேனா ரிக்­கார்­டிங் செய்து அதை இரண்டு டிராக்­கு­க­ளில் ஸ்டீரியோ ரிக்­கார்­டிங்­காக மாற்­றப்­பட்­ட­வை­தாம்.

முழு­மை­யான ஸ்டீரியோ ரிக்­கார்­டிங் செய்­தது ‘ப்ரியா’ படத்­தில்­தான். இதில் எட்டு டிராக்­கு­கள். 16 சானல்­கள். நான் என் முதல் பட­மான ‘அன்­னக்­கி­ளி’­­­யி­லேயே ஸ்டீரியோபோனிக் முறை­யில் பாடல்­களை ஒலிப்­ப­திவு செய்ய விரும்­பி­னேன். ஆனால், அன்று நான் இந்­தத் துறைக்­குப் புதி­ய­வன். என் பேச்சு எங்­குமே எடு­ப­டாது. ஒலிப்­ப­தி­வா­ளர்­கள் என்­னு­டன் ஒத்­து­ழைக்­க­வில்லை. அத­னால், என் முயற்­சியை அப்­போது கைவிட்டு விட்­டேன்.

அதற்­குப்­பி­றகு நேர­மும் படம் வாய்க்­க­வில்லை. ‘ப்ரியா’ படத்தயா­ரிப்­பா­ள­ரி­டம் என்­னு­டைய ஆசை­யைத் தெரி­வித்­தேன். அவர்­கள் அதை ஏற்­றுக் கொண்டு, அதற்கு ஆகும் செல­வைப் பெரி­தாக நினைக்­கா­மல் அனு­ம­தித்­த­னர்.

ஸ்டீரியோபோனிக் முறை­யில் ஒலிப்­ப­திவு செய்ய நவீன கரு­வி­க­ளைப் பாட­கர் ஜேசு­தாஸ் வாங்கி வைத்­தி­ருந்­தார். அரு­ணா­ச­லம் ஸ்டுடி­யோ­வில் அவர் ஓர் ஒலிப்­ப­தி­வுக் கூடத்தை அமைத்­துக் கொண்­டி­ருந்­தார். ஆனால், அது அப்­போது முடி­வ­டை­ய­வில்லை. எங்­க­ளுக்கோ அவ­ச­ரம். நான் கேட்­டுக் கொண்­ட­தற்­கி­ணங்க அக்­க­ரு­வி­க­ளை­யெல்­லாம் எடுத்து வந்து பரணி ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தில் வைத்து, ஐந்து பாடல்­க­ளை­யும் ஒலிப்­ப­திவு செய்­யும் வரை கூடவே இருந்து உதவி செய்­தார். ஆனால், அதற்­காக அவர் ஒரு காசு கூட வாங்­கிக் கொள்­ள­வில்லை. இது அவ­ரது பெருந்­தன்­மை­யைத்­தான் காட்­டு­கி­றது.

‘ப்ரியா’ படத்­தின் ரிக்­கார்­டு­கள் ஜெர்­ம­னி­யில்­தான் பிரஸ் செய்­யப்­பட்டு, கோல்கட்டாவில் ‘கட்’ செய்­யப்­ப­டும். ஏனென்­றால் இந்­தி­யா­வில் பிரஸ்­ஸிங் செய்ய வசதி இல்லை. ஸ்டீரியோபோனிக் முறை­யில் இதற்கு முன்­னர் சில பாடல்­கள் வந்­தி­ருக்­கின்­றன என்­றா­லும், முதல் முறை­யாக 8 டிராக்­கு­க­ளில் ஒலிப்­ப­திவு செய்து வெளி­வந்த ரிக்­கார்­டு­கள் ‘ப்ரியா’ பட ரிக்­கார்­டு­கள்­தாம். இதில் குறிப்­பாக ஒரு பாட­லுக்கு மட்­டும் 115 வாத்­தி­யங்­களை உப­யோ­கித்­தி­ருக்­கி­றேன்." இப்­ப­டிதான் அறி­மு­க­மான இரண்­டா­வது ஆண்­டி­லேயே புதிய  முறை­களை அறி­மு­கப்­ப­டுத்­திப் புதிய சாத­னை­க­ளுக்கு வழி­வ­குத்­த­வர் இசை­ஞானி.