அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையிலே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: அமைச்சர் பேட்டி

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2019 13:15

கோபிசெட்டிப்பாளையம்,

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று கோபிசெட்டிப் பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு (2019 - 2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது.

இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, இந்த 3 ஆண்டு களுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும்.

இந்த 3 ஆண்டிற்குள் மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்குப் பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கைதான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மத்திய அரசு அறிவிப்பு

ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும்.

அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.