கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 197

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2019

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் !

பல ஹிட் பாடல்­க­ளைப் பாடிய பிறகு ஒரு பின்­ன­ணிப்­பா­ட­கனை  மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­கள். நட்­சத்­திர பவ­னி­யில் பாடல்­கள்  வெற்­றி­வாகை சூடும் போது, பல ரசி­கர்­கள் அந்­தப் பின்­ன­ணிப் பாட­கனை உச்சி மேல் வைத்­துக் கொண்­டா­டு­வார்­கள். ஆனால், ஆரம்ப கட்­டத்­தி­லும் அதன் பிற­கும் கூட, இத்­த­கைய ஒரு பாட­கன் பல­வித தடைக்­கற்­க­ளை­யும் அவன் மீது வீசப்­ப­டும் கருங்­கற்­க­ளை­யும் சந்­திக்­க­வேண்­டிய சந்­தர்ப்­பங்­கள் வரும். பல தடை­களை  சமா­ளிக்­க­வேண்­டிய கட்­டங்­கள் வரும்.

தமிழ் சினி­மா­வின் இரு தில­கங்­க ­ளான நடி­கர் தில­கத்­திற்­கும் மக்­கள் தில­கத்­திற்­கும் அவர்­களே பாடு­கி­றார்­களோ என்ற அள­வுக்­குப் பின்­னணி பாட்­டுக் குர­லாக பரி­ண­மித்த டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னின் வாழ்க்­கை­யி­லும், அவ­ரு­டைய முன்­னேற்­றப் பாதை­யில் பல சவால்­கள் குவிந்­தி­ருந்­தன. இது­போன்ற விமர்­ச­னங்­கள், கண்­ட­னங்­கள் ஆகி­ய­வற்­றின் சிக­ர­மாக விளங்­கக்­கூ­டி­யது, இசை மேதை என்­றும், தமிழ்த் திரை இசை­யின் ஒரு முன்­னோடி இசை­ய­மைப்­பா­ளர் என்­றும் அறி­யப்­பட்ட சி.ஆர்.சுப்­ப­ரா­ம­னின்  கூற்று.

‘மண­ம­கள்’, ‘நல்­ல­தம்பி’, ‘லைலா மஜ்னு’, ‘தேவ­தாஸ்’ போன்ற படங்­க­ளின் இசை­ய­மைப்­புக்­காக அரி­யப்­ப­டும் சுப்­ப­ரா­மன், வெகு சில படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தார் என்­றா­லும், ஆறு, ஏழு ஆண்­டு­க­ளுக்­குத்­தான் செயல்­பட்­டார் என்­றா­லும், மிக உயர்ந்த இடத்­தில் வைத்து எண்­ணப்­ப­டு­கி­றார்.

அவர் ஒரு நாள் தன் சக இசை­ய­மைப்­பா­ள­ரான சுப்­பையா நாயு­டு­வைப் பார்த்து கேட்­டார், ‘‘நாயுடு...நீங்க எப்­படி இந்த சவுந்­த­ர­ராஜ பாக­வ­த­ரைப் பாட வைக்­கி­றீங்க....? அவ­ருக்­குப் ஒண்­ணுமே வர­மாட்­டேன்­கு­தேய்யா ....!’’

சுப்­ப­ரா­ம­னின் செறி­வான இசை கற்­பனை, பல­வித இசை சங்­க­தி­க­ளி­லும் சஞ்­சா­ரங்­க­ளி­லும் விளை­யா­டும்....எல்லா சாரீ­ரங்­க­ளி­லும் அந்த நெளி­வு­சு­ளி­வு­கள் ‘பேசாது’. இந்த வகை­யில்­தான் அவர் சுவுந்­த­ர­ரா­ஜ­னின் குரல் வாகை விமர்­சித்­தார். இசை­ய­மைப்­பா­ளர் கற்­பனை செய்­யும்  நளி­னங்­க­ளை­யும் நகா­சு­க­ளை­யும் அப்­ப­டியே பாட முடி­யாத தன்­மையை குறை கூறி­னார்.

சுப்­ப­ரா­மன் இந்த வகை­யில் சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பற்­றிக் கூறி­ய­தும், சுப்­பையா நாயுடு பதில் அளித்­தார். ‘‘நீங்க சொல்­றதை அவ­ரால் பாட முடி­ய­லேன்னா, அவ­ருக்கு வர்­றதை வச்சு பாட வையுங்க’’.

 ஒத்து வர­வில்லை என்று ஒரு­வரை நிரா­க­ரிப்­பது எளிது...இன்­னொரு கலை­ஞ­னின் திறமை என்ன என்று புரிந்து கொண்டு செயல்­பட்­டால்

அவ­னு­டைய பெரு­மை­யும் வெளிப்­ப­டும், திரைப்­பா­ட­லுக்­கும் வெற்றி கிடைக்­கும். ஆனால் அதற்கு இசை­ய­மைப்­பா­ளன் வளைந்­து­கொ­டுக்­கத் தயா­ராக இருக்­க­வேண்­டும்.

‘ஆடற மாட்டை ஆடிக் கறக்­க­ணும்  பாடற மாட்­டைப் பாடிக் கறக்­க­ணும்’ என்ற பழ­மொழி சும்­மாவா வந்­தது? இதன் சாரத்தை சுப்­பையா நாயுடு தன்­னு­டைய சக இசை­ய­மைப்­பா­ள­ருக்­குத் தொட்­டுக் காட்­டி­னார். இந்த நிகழ்ச்சி எனக்கு எப்­ப­டித் தெரிந்­தது? யாரோ, எங்கோ எழு­தி­யதை திரித்­துக் ‘கதை’ விட­வில்லை. டி.எம்.எஸ். என்­னி­டம் கூறி­ய­தால்­தான் எனக்கு இந்த விஷ­யம் தெரிந்­தது.

தன்­னைப்­பற்றி ஒரு பிர­பல இசை­ய­மைப்­பா­ளர் தாழ்ச்­சி­யான ஒரு கருத்­தைக் கூறி­னார் என்­பதை மறைக்­கா­மல் டி.எம்.எஸ். என்­னி­டம் அதைப் பகிர்ந்­து­கொண்­டி­ருந்­தார். அந்த அள­வுக்கு வெளிப்­ப­டை­யான தன்மை கொண்­ட­வர் அவர்.  சரி, டி.எம்.எஸ்­சுக்கு மேற்­படி உரை­யா­ட­லின் விஷ­யங்­கள் எப்­ப­டித் தெரி­யும்? சுப்­ப­ரா­ம­னுக்­கும், சுப்­பை­யா­ வுக்­கும் மேற்­படி உரை­யா­டல் நடக்­கும் போது அவர் அங்கு இருக்­க­வில்­லையே? பின்­னா­ளில், டி.எம்.எஸ்­சு­டம் சுப்­பையா நாயுடு கூறி­ய­தால்­தான்  அவ­ருக்கு இந்த விஷ­யம் தெரி­ய­வந்­தது!

ஒவ்­வொரு கலை­ஞ­னும், படைப்­பா­ளி­யும், மனி­த­னும் வெற்றி பெற வேண்­டும் என்­றால் அவ­ர­வ­ருக்கு இயற்­கை­யாக வரு­கிற விஷ­யங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்­கிற உண்­மையை சுப்­பையா நாயு­டு­வின் அணு­கு­முறை விளக்­கு­கி­றது. குயில் குயி­லா­கத்­தான் இருக்க வேண்­டும். அது  கிளி­யாக  தன்­னு­டைய குரலை வெளிப்­ப­டுத்­தத் தொடங்­கி­னால், அதன் சுயத்­தன்­மை­யோடு  அடை­யா­ள­மும் அற்­றுப்­போ­கும். இந்த விஷ­யம், டி.எம்.எஸ்­சின் வாழ்க்­கை­யிலே வேறு சந்­தர்ப்­பங்­க­ளி­லும் அவ­ருக்­கு­முன் நின்று அச்­சு­றுத்­தி­யது.

தன்­னு­டைய மாண­வப்­ப­ரு­வத்­திலே, தியா­க­ராஜ பாக­வ­த­ரின் பாடல்­க­ளால் கவ­ரப்­பட்டு அவற்­றைப் பாடிக்­கொண்­டி­ருந்­த­வர் சவுந்­த­ர­ரா­ஜன். நல்ல ஸ்தாயி­யில் பாக­வ­தர் பாடும் பாடல்­களை சவுந்­த­ர­ரா­ஜ­

னால் பாட முடிந்­தது என்­ப­து­தான்

அவர் திரைப்­பி­ர­வே­சம் செய்­வ­தற்­குக் கார­ண­மா­க­வும் அமைந்­தது.

தியா­க­ராஜ பாக­வ­தர் தன்­னு­டைய முதல் வெற்­றிப்­ப­ட­மான ‘சிந்­தா­ம­ணி’­­­யில் செஞ்­சு­ருட்டி ராகத்­தில் பாடிய, ‘ராதே உனக்­குக் கோபம் ஆகா­தடி’ என்ற பாட­லின்   சற்று மாற்­றப்­பட்ட வரி­க­ளு­டன் வந்த, ‘ராதே நீ என்னை விட்டு போகா­தேடி’ என்ற பாடல்­தான்,  டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல் (‘கிருஷ்ண விஜ­யம்’ 1950)

படத்­தின் இயக்­கு­நர் சுந்­தர

ராவ் நட்­கர்­னி­யின் வீட்­டில் இட்லி மாவெல்­லாம் அரைத்­துக்­கொ­டுத்­தும், நட்­கர்­னி­யின் மக­னுக்­குப் புரா­ணக் கதை­கள் கூறி­யும் தன்­னு­டைய அறி­மு­கப் பாட­லைப் பெற்­றி­ருந்­தார்

சவுந்­த­ர­ரா­ஜன். சுப்­பையா நாயு­டு­தான் இசை­ய­மைப்­பா­ளர். சுப்­பை­யா­வைப்

பொறுத்­த­வரை, சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­கும் அவ­ருக்­கும் பார்த்த மாத்­தி­ரத்­தி­லேயே இணக்­கம் ஏற்­பட்­டு­விட்­டது. ஆனால் பாடல் பதி­வா­ன­தும் டி.எம்.எஸ்­சுக்கு ஒரு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. ‘‘தியா­க­ராஜ பாக­வ­தர் குரல் மாதிரி இருக்­குன்னு  இவ­ரைப்­பாட வச்சா, பதி­வான பாட்டு பாக­வ­தர் பாட்டு மாதி­ரியே இல்­லையே’’, என்ற கண்­ட­னம் வந்­து­விட்­டது. முதல் பாட­லுக்கே டேஞ்­சர் வந்­து­விட்­டது.

விஷ­யம் என்­ன­வென்­றால், பாக­வ­த­ரைப் பின்­பற்றி சவுந்­த­ர­ரா­ஜன் காலை எடுத்து முன்னே வைத்­தா­லும், பாக­வ­தர் குர­லுக்­கும் அவ­ரு­டைய குர­லுக்­கும் நல்ல வேறு­பாடு இருந்­தது. பாக­வ­தர் குரல் சற்று பெண் தன்மை கொண்­டது. ஆகவே இயற்­கை­யாவே அவ­ரது  குர­லில் ‘பிட்ச்’ அதி­கம். சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு நல்ல பிட்­சில் பாட முடி­யும் என்­றா­லும் அவ­ரு­டைய குரல் இயற்­கை­

யா­கவே  கணீ­ரென்று குறைந்த பிட்­சில் ஒலிக்­கக்­கூ­டி­யது. இந்த வித்­தி­யா­சத்­தின் கார­ண­மாக, ‘ராதே’ பாடலை பாக­வ­த­ரை­விட குறைந்த ஸ்ருதி­யில் சவுந்­த­ர­ரா­ஜன் பாடி­விட்­டி­ருந்­தார். அத­னால், பாக­வ­தர் பாட்டு மாதி­ரியே இல்லை என்ற விமர்­ச­னம் வந்து விட்­டது! இதன் கார­ண­மாக, பாக­வ­தர் போல் ஒலிக்­க­வேண்­டும் என்று மீண்­டும் ஸ்ருதியை அதி­க­ரித்­துப் பாட வேண்டி வந்­தது. இப்­ப­டிப் பாடி­ய­வு­டன் பாடல் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது!  

‘‘பாக­வ­தர் மாதிரி பாடு­வார்,

அப்­பு­றம் பிட்­சுக்கு என்ன குறைச்­சல், பொளந்­து­கட்­டி­வி­டு­வார்’’ என்ற இமேஜ் சவுந்த ராஜனை  மீண்­டும் மிரட்ட, இன்­னும் சில ஆண்­டு­க­ளில்  அவர் முன்னே வந்து நின்­றது (1954-–55).

மயி­லாப்­பூர் தெற்கு மாட­வீ­தி­யி­லி­ருந்த உடுப்பி ஓட்­ட­லில் டிப­னும் பாதாம் அல்­வா­வும் சாப்­பிட்டு விட்டு, அந்த வீதி­யின் முனை­யிலே சவுந்­த­ர­ரா­ஜன் நின்­ற­போது ஒரு நாள் காலை.... ஒரு வேன் வந்து அவர் அரு­கிலே நின்­றது. அதில் இசை­ய­மைப்­பா­ளர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் அமர்ந்­து­கொண்­டி­ருந்­தார். வேனில் அமர்ந்­த­படி அவர் சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பார்த்­துப் பேசி­னார்....

‘‘அண்ணே...நாங்க (அதா­வது விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி) இப்போ மியூ­சிக் டைரக்­டர்­கள் ஆயிட்­டோம்...இப்போ ராமண்ணா படத்­துக்கு இசை­ய­மைக்­கி­றோம்...உங்­க­ளைக் கூப்­பிட்­ட­னுப்­பு­றோம்....நீங்க வாங்க,’’ என்று கூறி­விட்­டுச் சென்­றார்.

எம்.எஸ்.வி. கூறி­ய­படி சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குக் ‘குலே­ப­கா­வ­லி’­­­யில் பாட அழைப்பு வந்­தது. ஆனால், ‘மெல்­லிசை மன்­னர்­கள்’ என்று விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்தி புகழ் பெற்ற காலத்­தி­லும், தனி­யாக எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் ‘மெல்­லிசை மன்­ன’­­­ராக கோலோச்­சிய போதும், அவ­ரு­டைய ஆஸ்­தான பாட­க­ராக விளங்­கப்­போ­கிற டி.எம்.எஸ்., விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­தி­யின் இசை­யில்  முதல் பாட­லைப் பாடும் முன்பே சச்­ச­ரவு தொடங்­கி­விட்­டது!

பாக­வ­த­ரின் ஸ்ருதி­யில் சவுந்­த­ர­ரா­ஜன் அனா­யா­ச­மா­கப் பாடு­வார் என்ற அபிப்­ரா­யத்­தில் அவ­ருக்கு அதிக ஸ்ருதி வைத்­துப் பாடச் செய்­யும் முயற்­சி­தான் லடாய்க்கு வழி­வ­குத்­தது. அப்­ப­டிச் செய்­த­வர் விஸ்­வ­நா­தன் அல்ல, ராம­மூர்த்தி!  

‘‘அண்ணே, பாட­லோட ரேஞ்­சை பார்க்­கும் போது, மேலே பாட எனக்கு  கஷ்­டமா இருக்கு.. ஒரு கட்டை இல்லைன்னா அரை கட்டை  குறைச்சு வச்சா சவுக்­கி­யமா பாடு­வேன்,’’ என்­றார் டி.எம்.எஸ்.

இந்த விஷ­யத்­தில் ராம­மூர்த்தி அரை இடம் கூட அசைந்­து­கொ­டுப்­ப­தாக இல்லை!

‘பாக­வ­தர் ரேஞ்­சுக்­குப் பாடற­வர்­தானே... எல்­லாம் முடி­யும் பாடுங்க,’ என்­றார் ராம­மூர்த்தி !

நேரம் போகப்­போக, இதை சவுந்­த­ர­ரா­ஜ­னால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. அவ­ருக்­கும் ராம­மூர்த்­திக்­கும் வாய்ச்­சண்டை வலுக்க ஆரம்­பித்­து­விட்­டது.

கடை­சி­யில்,  ‘இப்­ப­டி­யெல்­லாம் எனக்­குப் பாட­வேண்­டிய அவ­சி­யம் இல்லை’ என்ற சவுந்­த­ர­ரா­ஜன்,  ‘ஒலிப்­ப­திவு மேதை’ என்று பின்­னர் அறி­யப்­பட்ட ரங்­க­சா­மி­யின் ஒலிப்­ப­திவு கூடத்­தி­லி­

ருந்து வெளி­ந­டப்பு செய்து­ விட்­டார். இந்த நிகழ்ச்­சி­யும் என்­னி­டம் சவுந்­த­ர­ரா­ஜன் கூறி­ய­து­தான்.

கோபத்­தில் டி.எம்.எஸ். கிளம்பி விட்­டார் என்­பதை அறிந்த விஸ்­வ­நா­தன், வருத்­தப்­பட்­டார் என்று பிறகு சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குத் தெரிந்­தது. டி.எம்.எஸ்­ஸýக்­கும் ராம­மூர்த்­திக்­கும் வாக்­கு­வா­தம் நடந்­த­போது, அவர்

ஏதோ வேறு வேலை­யாக கொஞ்ச நேரம் ஸ்தலத்­தில் இல்­லா­தி­ருந்­தார். அந்த நேரம் பார்த்து ‘கச­முசா’ நடந்து விட்­டது.

பிறகு டி.எம்.எஸ்­சி­டம் எம்.எஸ்.வி. பேசி­ய­போது, ‘‘என்­கிட்ட சொல்­லக்­கூ­டாதா அண்ணே...? நீங்க ஏன் வீணா டென்­ஷன் ஆகு­றீங்க’’ என்று கூறி, டி.எம்.எஸ்சை மீண்­டும் வர­வ­ழைத்­துப் பாட­வைத்­தார். வெற்­றிப்­ப­ட­மாக அமைந்த ‘குலே­ப­கா­வ­லி’­­­யில் டி.எம்.எஸ். பாடிய பாடல்­க­ளும் வெற்றி அடைந்­தன.

இந்த சம்­ப­வத்­தால் டி.எம்.எஸ்­சுக்­கும் ராம­மூர்த்­திக்­கும் ஒத்­துப்­போ­கவே இல்லை என்று நினைத்­து­வி­டா­தீர்­கள். இரண்­டாம் இரட்­டை­ய­ரின் இசை ஞானத்­தைக் குறித்து சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு அதிக மரி­யாதை இருந்­தது!

தான் சொன்­ன­ப­டி­தான் பாட­வேண்­டும், எதை­யும் மாற்­றக்­கூ­டாது என்­ப­தில் எம்.எஸ்.வி. கண்­டிப்­பாக இருந்­த­வர்­தான். ஆனால் பாக­வ­தர் ரேஞ்­சி­லேயே டி.எம்.எஸ்.­சும் பாட வேண்­டும் என்ற விஷ­யத்­தில் அவர் இறங்­கி­வந்து டி.எம்.எஸ். பக்­கம்

நின்­றார்.

டி.எம்.எஸ்.சின் குர­லில் ஆயி­ரம் ஆயி­ரம் வெற்­றிப்­பா­டல்­க­ளைத் தந்­தார் விஸ்­வ­நா­தன். ‘‘என் குர­லும் பாட்­டும் பரி­ம­ளிக்­க­வேண்­டும் என்­ப­தைக் கணக்­கில் கொண்டு அவர் பாடல்­கள் அமைத்­தார்,’’ என்று, ‘மெல்­லிசை மன்­னர் பாட்­டுப் பய­ணம்’ என்ற எனது நூலின் சிறப்­பு­ரை­யில் டி.எம்.எஸ். வாக்­கு­மூ­லம் கொடுத்­தி­ருக்­கி­றார்.

இப்­ப­டி­யி­ருந்த போதும் எல்லா நாட்­க­ளும் ஒரே மாதிரி இருக்­குமா? பாட­கர், வாத்­திய இசை கலை­ஞர்­கள் என்று எல்­லோ­ரும் சேர்ந்து ‘லைவ்’­­­வா­கப் பாடல்­க­ளைப் பதிவு செய்­ய­வேண்­டிய கால­கட்­டத்­தில், சில பாடல்­க­ளின் பதி­வின் போது, டேக் ஒண்ணு, ரெண்டு, மூணு என்று கடந்­து­போய், இரட்டை இலக்­கத்­தைத் தாண்டி செல்­லும்.

திரும்­பத் திரும்­பப் பாடும் போது குரல் படும் வாதை ஒரு புறம், வயிற்­றுப்­பசி தலைக்­கேறி பத்­தும் பறந்­து­போ­கும் நிலை இன்­னொரு புறம் என்று டி.எம்.எஸ். படா­த­பாடு படு­வார்.

‘எனக்­குப் பாட்­டும் வேணாம் ஒண்­ணும் வேணாம்’ என்று கடை­சி­யில் காரில் ஏறி அவர் வீடு திரும்­பிய சம்­ப­வங்­கள் உண்டு (உதா­ர­ணத்­திற்கு, ‘நில­வைப் பார்த்து வானம் சொன்­னது’ பாடல் பதி­வின்­போது இப்­படி நடந்­தது).  அப்­பு­றம் எம்.எஸ்.வி. போன் செய்து டி.எம்.எஸ்சை மீண்­டும் வரச்­சொல்­வார். இசை­யின் இழை­கள் மீண்­டும் இணை­யும். மீண்­டும் நில­வைப் பார்த்து வானம் பேசும், ஆனால், ‘என்­னைத்­தொ­டாதே’ என்­றல்ல!

(தொட­ரும்)