காஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் : ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 20:47

நியூயார்க்,

   காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை  மூலம் தீர்வு காண  வேண்டும் என்று ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தியா தன் தரப்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
 ஜெனிவாவில் நேற்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்  42-வது கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி கலந்து கொண்டு பேசினார்

அப்போது காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்துவது அவசியம்   என்று வலியுறுத்தினார்.

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் விமர்ஷ் ஆர்யன் பதிலடி கொடுத்து  பேசினார்.

ஜம்மு– காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவு தற்காலிகமானது. சமீபத்தில் அந்தப் பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட உரிமை.  இது முழுமையாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக ஐ.நா  தலைமை செய்திதொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் :

 ஐநா பொதுச் செயலாளரின் தகவல் அனைவருக்கும் பொதுவானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிப்பதை நினைத்து அவர் கவலை கொண்டுள்ளார்.

கடந்த மாதம் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் ஆண்டோனியோ கட்டாரெஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷியுடனும் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இருவருடனும் ஆலோசித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஐநா மத்தியஸ்தம் செய்யுமா என்ற கேள்விக்கு எங்களது பதில் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இரு நாடுகளும் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஐநா தயாராக உள்ளது.

மேலும் ஐநா மனித உரிமை ஆணையர் கூறியப்படி மனித உரிமைகளுக்கு முழு மரியாதை கொடுத்தால் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று ஸ்டீபன் துஜாரிக் கூறினார்.