நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 20:46

நெல்லை,

  நெல்லையில் 37 ஆண்டுகளுக்கு முன் திருடி கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த நடராஜர் சிலை வரும் செப்டம்பர் 13ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர்,  சிவகாமி தேவி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன.

இந்த 4 சிலைகளில் ஒன்றான நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் இருப்பதை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது. அதை தொடர்ந்து நடராஜர் சிலையை டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டில்லிக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, விரைவு ரயில் மூலம் செப்டம்பர் 13ம் தேதி சென்னைக்கு கொண்டு  வரப்பட உள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.